புகழினி

July9, 2009

தம்பியான வில்லன்.

Filed under: வகுப்பு — pukalini @ 20:19

ஒரு மாதமாக வகுப்புக்கு போறதும் வாறதுமாகவே இருக்கு. உருப்படியாக நடந்தது எதுவும் இல்லை. வகுப்பில் என்னிலும் வயது குறைந்த குழந்தைகள். கல்லூரிப் படிப்பு சப்பென்று போய் விடுமோ என்று மனசுக்குள் ஒரே அங்கலாய்ப்பு. பார்க்கத் தகுந்தவாறு ஒரு பெண் கூட இல்லை. அதாவது எனக்கு தோதாதன மாதிரி. மாணவப் பெண்கள் எல்லோருமே இன்னமும் பக்குவப் படவில்லை.  காலையில் வகுப்புக்கு வந்தமா, காலைத் தூக்கி கதிரைக்கு மேலே போட்டமா, தயிர் சாதத்தை  புளிச்சுப் போன  மாங்காய் ஊறுகாயுடன் நக்கித் தின்றமா,வகுப்பில் நல்லாத் தூங்கினமா என்றே பொழுதைப் போக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.

பசங்க இன்னமும் படு மோசம். ஒழுங்காக் குளிக்கக் கூட அக்கறை இல்லை. வகுப்புக்கு வந்தாலும் ஏதாவது சினிமா நடிகையின் படத்தை ஒளித்து ஒளித்துப் பார்ப்பதற்கே காலங் கடந்து விடும்.  சின்னப் பொடிசுகள்.இதற்கிடையில் அண்ணா, அண்ணா என்று அன்புத் தொல்லை. எப்படி சகசமாய்ப் பழகுவது.என்ன செய்வது இந்த வயதில் படிக்க வந்தது யார் குற்றம்?

இன்றைக்கு வகுப்பு நடத்த புதுசா ஒருத்தி வாறதென்ற பேச்சு. வாறதாவது கொஞ்சம் குளிர்ச்சியாய் இருக்க வேண்டுமென்ற வேண்டுதலோடு ஒன்றுக்கு இரு தடவையாக சவர்க்காரத்தை போட்டுத் தேய்த்து கிளம்பினேன். ஆண்டவா, அப்படி ஒருத்தன்  இருந்தானென்றால் உனக்கு ரொம்ப நன்றிப்பா. வந்தவளாவது அம்சமா இருக்காளே? இனிமேல் கண்டிப்பா பாடம் நடத்துறதைக் உன்னிப்பாகக் கவனிப்பேன்.

ஒரு மாதம் கடுகாய் கரைந்து போக, கனவுலோகக் காதலும்  அத்திவாரம் போட்டு  மெல்ல, மெல்ல மேலெழும்பிக் கொண்டிருந்தது. பசங்க, பொண்ணுங்களும் பரவாயில்லை. நானும் வயது வித்தியாசம் பாராது பழகியதால் அவர்களும் கொஞ்சம், கொஞ்சமாக பயத்தை விட்டு பழக ஆரம்பித்தார்கள்.

இன்று மாலை கடைசி வகுப்பு. நம்மாளின் மாதிரிப் பரீட்சையாம். எல்லோருமே ஒரு மாதிரியாய்  ஆளையாள் பார்த்துப் பார்த்து எழுத நமக்கு கோபம் பொத்துக் கொண்டு வெளியேறி கரை தட்டியது. டேய் எல்லோருமே ஒழுங்காப் படிச்சு எழுதுங்கடா. அப்புறம் நீங்க கோட்டை விட்டு நம்மாளு மனசு சங்கடப் படுவதை என்னால் பொறுக்க முடியாது கண்ணுங்களா, என்று ஒரு சத்தம் போட்டு வைத்தேன்.

இதற்காகவே காத்திருந்தவன் போல் வில்லன் கிளம்பினான். நானும் வழமை போல் சீக்கிரமே முடித்து விட்டு அவசரமாய் கிளம்பினேன். நமக்குத் தான் எப்பொழுதுமே சினிமாவும், தண்ணிப் பார்ட்டியும் வெளியே காத்திருக்கே?

அடுத்த நாள் காலையில் விடயம் ஊதிப் பெருக, வகுப்பில் எல்லோருமே என்னிடம் வந்து  நடந்தது என்ன என்று தெளியப் படுத்தி கவலைப் படுத்தினார்கள். முதல் வகுப்பு நம்மாளு உள்ளே வந்தா, வந்து என்னிடம் நேராக இனிமேல் இப்படி பண்ண வேண்டாம். நல்லது இல்லை, என்று புத்திமதி வேறு. அம்மாடி உனக்கு என்னிலும் இரண்டு வயது கம்மிம்மா, எனக்கே நீ அறிவுரை சொல்லுறியே என் உணர்ச்சிகளை  நீயாவது கொஞ்சம் புரிந்து கொள்ளனம்மா என்று மனசுக்குள் கேட்டுக் கொள்ள, அவவுக்கு அது கேட்டிருக்கும் போல முகத்தில் ஒரு வித  நாணம் படர நகர்ந்து விட்டாள்.

அதுக்கப்புறம் என்ன ஒரே கலாட்டா தான்.

வில்லன் – ஒரு நாள் அவனைத் தனியே கூட்டிப் போய் நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்து எனது நன்றியை வெளிப்படுத்தினேன். ஒன்று வகுப்பில் என்னுடன் கூட இருந்தவர்களை அடையாளம் காட்டியதற்கு, இரண்டாவது எனது காதலுக்கு  தூது போனதற்கு.

Blog at WordPress.com.