புகழினி

April24, 2010

பிச்சைக்காரனாக்கிட்டாங்களே..

Filed under: சமுகம் — pukalini @ 01:39

நான் வேலை செய்யும் ஒரு இருட்டுக் கட்டடம். யாருக்குமே உள்ளுக்குள் என்ன நடக்குதென்று பூரணமாகத் தெரியாது. நாட்டின் முக்கியமான மற்றும் அத்தியாவசிய தேவைகள் பரிமாறப்படும் இடம். இன்னமும் பல ரகசியங்களை தனக்குள் மூடி வைத்திருக்கின்றது. கட்டடத்தின் அளவுக்கு கூலிகளின் அளவு மிகவும் கொஞ்சம்.

அதிலும் அதைக் கூட்டிக் கழுவித் துடைச்சு வைக்கிறதுக்கு என்று ஒரு கூட்டம். அங்கும் பல பிரிவுகள். கட்டடத்தின் வெளிப் பக்கத்தை  பெருக்கவும், ஊதித் தள்ளும் சிகரட் அடிக்கட்டைகளை பொறுக்கவும்  வாய்க்குள் மித மிஞ்சிப் போன எச்சிலை துப்பினால் அதைத் துடைக்கவும் என்று ஒருத்தன். பாவம். அவன் ஏற்கனவே ஒரு மாதிரி. கொஞ்சம் மூளையில் சுகமில்லாத ஒரு நடுத்தர வயது ஆடவன். இது வரைக்கும் எந்த வித குளறுபடியும் செய்ததாகத் தெரியாது.

எதுவோ ஒரு பன்னாடை முறையிட்டுள்ளது. அவன் பார்க்கின்ற பார்வை சரியில்லையாம். இருக்கலாம். கூட பணி புரிபவளின் சட்டைக்குள் என்ன இருக்கு என்று ஆராய்பவனுக்கும்,  அவனுக்கு ஏத்தி விட்டு குளிர்காயும் மகளிர் அணிக்கும் அவன் ஒரு குறைபாடுள்ள ஒரு சக மனிதன் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் வந்திருக்காது தான்.

பாவம் அவன். கடந்த ஒரு மாதமாக கட்டடத்துகு வெளியிலேயே தவம் கிடக்கின்றான். மீண்டும் வேலையில் சேரலாம் என்ற நம்பிக்கை.அவனுடன் கூட வேலை செய்யிறவங்களும் அவனிடம்  ஒழிந்து திரிகிறார்கள். தினமும் இது ஒரு வாடிக்கை. அவனுக்கு கொடுக்கின்ற சம்பளத்தில் ஒருவனால் மூன்று வேளையும் ஒழுங்காச் சாப்பிடக் கூட முடியாது. அவனிடமும் தமது திமிரைக் காட்டி இ ருக்கு ஒரு கூட்டம். அவனால் இப்பொழுது எங்கு வேலை பார்க்க முடியலாம்?

நேற்று வழமை போல அவன் வந்து நின்றான். ஒரு பெண்மணி கொஞ்சம் காசு கொடுத்து விட அவன் அதை வாங்கிக் கொண்டு சாப்பிடச் சென்று விட்டான். ஆமாம், அவன் உடல் மெலிந்து தான் போனான். சாப்பாட்டுக்கு என்ன செய்வான். கடைசியில் கை ஏந்த வைத்து விட்டார்களே. இன்றும் அவனைப் பார்த்தேன். என்ன செய்வது ஏதாவது கொடுக்கவும் மனசு வரவில்லை. அந்த முகத்தையும் உற்றுப் பார்க்கவும் தைரியம் இல்லை. நானும் ஒரு குற்றவாளி தான்.

April7, 2010

மதுரை இராசாசி மருத்துவமனை-உயிருடன் திரும்பலாமா?

Filed under: சமுகம் — pukalini @ 23:21

பிறவிப் பெருங்கடல் எடுத்த பயனுக்கு இப்பிறப்பிலேயே, பூவுலகில் மதுரை இராசாசி மருத்துவமனையைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆமாம், பாவஞ் செய்தவர்கள், கொள்ளைக்காரர்கள்,கொலைகாரர்கள்,திருடர்கள்,பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள் எல்லோரும் அங்கே தண்டனைக்கு காத்திருந்தார்கள். பின்னர் எவ்வாறு அந்த மருத்துவமனையையும் அங்கு சிகிச்சை பெறக் காத்திருப்போர்களையும் சொல்லுவது. பாவப் பட்ட சீவனுகள் போக்கிடம் இல்லாமல் அங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள். மற்றும் படி மருத்துவமனை என்று சொல்லுவதற்கு அங்கு என்ன இருக்கோ தெரியவில்லை. அன்பு மணீ  கூட வந்திட்டு போயிருக்கார். அவர் பாவம் வெளி நாடுகளிலோ,உள்ளூரிலோ நல்ல மருத்துவம்னையைப் பார்த்திருக்கவே முடியாது. இங்கு குப்பை கொட்டிவிட்டு வரும் மருத்துவ மாணவர்கள் இன்னமும் ஒரு வருசம் மாடு மேய்க்கணுமாம். என்ன கொடுமையடா. முடிஞ்சா ஒரு சுற்றுலா போய்விட்டு வாருங்கள்.

ஆத்தில் மண்ணை அள்ளித் தூர் வாருவாங்கள். வைகையில் ஆத்தோரம் உள்ள பீக்கழிவுகளை ஆத்துக்குள்ளே பரப்புகிறார்கள். வைகைக்கரை மேம்பாலம் எப்போழுது கட்டி முடியும்? சீனாக்காரனின் பொறியியல் அதிசம் என்று யூ டியூப்பில் தேடினால் ஏராளம் வந்து குவியுது. இந்தியாவுக்கு தேடிப் பார்த்தால்…… ரொம்ப சந்தோசம்.

வெள்ளைக்காரன் வராவிட்டால் என்ன நடந்திருக்கும். அவன் போட்ட ரோடு, பாலம், தண்டவாளம், ஆசுப்பத்திரி,கல்லூரி, அணைகள். ரொம்பவே நல்லவங்கடா.

April1, 2010

வைகை சூப்பர் பாஸ்டும் காட்டுமிராண்டிகளும்.

Filed under: சமுகம் — pukalini @ 23:04

நானும் எனது மனைவியும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு வேலையாகப் போக வேண்டி இருந்தது. பேருந்துகளில் பயணம் செய்வதினை விட ரயிலில் பயணம் செய்வது கொஞ்சம் இலகுவாக இருந்தபடியால் முன்னாடியே பதிவு செய்து போகலாம் என்று முடிவெடுத்தோம்.  பதிவு செய்யப் போன மனைவி பாண்டியனில் போகலாம் என்று காத்திருப்போர் பட்டியலில் பெயரைக் கொடுத்து விட்டு வந்தாள்.  இரவுப் பயணம், காலையில் எழுந்திரிச்சு கிளம்ப வேண்டிய அவசரம் இல்லை என்ற நினைப்பு அவவுக்கு.  பின்னர் நல்ல டோஸ் ஒன்று கொடுத்த பின் நானே போய் வைகைக்கு பதிவு செய்து விட்டு வந்தேன்.
காலங் காத்தால எழுந்திருச்சு ஆட்டோ பிடிச்சு மதுரை சந்திப்புக்கு வந்தால் வழமை போல் மூத்திர வாசமும், பீ மணமும் வா  வா என்று கூவாமல் கூவி அழைத்தது. எல்லாம் வழமையானது தானே? படியில் ஏறி இறங்குவதற்குள் சென்னைக்கு நடந்தே போயிரலாம் போலிருந்தது. ஏதோ கொஞ்சம் தாமதித்து கிளம்பிய சூப்பர் பாஸ்ட் ஆடி அசைந்து சென்னைகு மதியம் கழித்து 1430க்கு வந்தடைந்தது. மதுரையில் இருந்து சென்னைக்கு மிஞ்சிப் போனால் ஒரு 500 கிலோ மீற்றர்கள் இருந்தாலும் சின்னக் கணக்குப் போட்டுப் பார்த்தால், சூப்பர் பாஸ்ட் ஊர்ந்து கொண்டு வந்திருப்பது தெரியும்.  யப்பானில் சுப்பர் சோனிக் ரயில்கள் தான் ஓடுது போல.
மதுரையில் இரு வெளிநாட்டு யுவதிகள் எங்களது பதிவுப் பெட்டியில் ஏறினார்கள்.  பரிசோதனையாளர் வந்து க்லைத்து விட்டார். ரொம்பக் கெடுபிடியான ஆள் போல என்று நினைத்தேன். வண்டி திண்டுக்கல், திருச்சி தண்டி வந்ததும் கேவலம்  புரிய வந்தது. எல்லாக் கூட்டமும் பதிவுப் பெட்டிகளுக்குள் திபு திபு என்று ஏறி இடம் பிடிக்க அடிபட்டார்கள். அட கருமாந்திரமே இப்படித் தெரிந்திருந்தால் இரண்டு நாட்கள் இருவர் சொந்த நேரத்தை செலவு செய்து முன் பதிவு செய்திருக்கத் தேவையில்லையே?கிராமத்து சனங்கள் மட்டுமல்ல, படித்துக் கிழித்த பகுத்தறிவாளர்களும் அந்தக் கூட்டங்களில் அடக்கம். கட்சிக் கூட்டத்து போகிறவர்களும் தான்.
ஒவ்வொரு முறை வண்டி நிற்கும் போதும் தலைவலி. அதிலும் குழந்தைகளுடன் வந்து இடம் கேட்டு முறைக்கும் தாய்மார் செம ஜோர். அவசரத்துக்கு மூத்திரம் போகக் கூட முடியவில்லை. பின்ன என்ன மயித்துக்கடா இப்படி பதிவு செய்து வந்தோம் என்று ஆகி விட்டது. சாதாரண சீட்டுக்களுடன் பதிவுப் பெட்டிகளில் ஏறுவது தப்பு. உள்ள வந்து உட்கார்ந்து இருப்பவர்களுடன் சண்டை போடுவது எல்லாவற்றிலும் தவறு. சீட்டுச் சோதிப்பவர் வந்து சும்மா தேமே என்று மண்டையை ஆட்டி விட்டுப் போய் விட்டார்.  மதுரைக்கு வந்த சோதனையோ என்று கண்ணை மூடித் தூங்கவும் முடியவில்லை. இதுக்கே இப்படி என்றால் பீகாரில் கையை  ஆட்டி வண்டியை நிறுத்தி ஏறுபவர்கள் என்ன கூத்து பண்ணுவார்கள். தமிழ் நாடும் கிட்ட முட்ட பீகாரை முந்தப் போகிறது தானே?
இரண்டு நேர சாப்பாடு வண்டியில் எடுக்க வேண்டும். 3 இட்லி 1 வடை அல்லது பொங்கல் 1 வடை18 ரூபாய்கள். யாரிடம் சொல்லி அழுவது. எல்லாம் அந்தக் குத்தகைக் காரர்களுக்கே வெளிச்சம். இதெல்லாம் அந்தப் பரமேசுவரனுக்கே அடுக்குமா?

February11, 2010

பனங்கொட்டை.

Filed under: சமுகம் — pukalini @ 02:03

காலையில் அஞ்சு மணிக்கே அம்மா எழுப்பியிருவா. இந்தப் பனக்காய் சீசன் தொடங்கினதில் இருந்து இது ஒரு தலைவலி. அதுவும் சும்மா இல்லை. கையில் டோர்ச் லைற்றும் கடகமுமாக ஒவ்வொரு பனை பனையாத் தேடிப் போகணும். அதிலும் கொஞ்சம் பிந்தினாக் காணும். பக்கத்து வீட்டுக்காரன் முந்தியிருவான். நாலைஞ்சு நாளாய்க் கவனிச்சு அவங்கள் எப்படியும் அஞ்சு மணிக்கு பிறகு தான் எழும்புவாங்கள் எண்டதைக் கண்டுபிடிச்சு எங்கட நேரத்தை அஞ்சு மணியாக்கியாச்சு.

அம்மாவுக்கு ஒரு பெரிய கடகம். எனக்கு சின்னதா ஒண்டு. பனங்காய் பிறக்குறதுக்கெண்டே அம்மம்மா தனிய இழைச்சு பொத்தி வச்சிருப்பா. பத்தாததுக்கு அப்பு வேற நாரினால் பின்னியிருப்பார். நல்லாப் பாரம் தாங்கும். சரி கிளம்பியாச்சு. அவிண்டு விழுகிற சாறத்தை இழுத்து இடுப்பில கட்டிக் கொண்டு அம்மாவுக்கு பின்னால போக வேண்டியது தான். முதலில பிள்ளையார் கோவில் வளவு. போற வழியிலேயே அப்பிடியே சறத்தை தூக்கி ஒண்ணுக்கு அடிச்சு அந்த நேரத்தை மிச்சம் பிடிச்சுக்கலாம். அம்மாவுக்கு தெரியும் எந்தப் பனைக்கு கீழ போனால் நிறையப் பனங்காய் விழுந்து கிடக்கும் எண்டு, அங்க போனால் தெரிந்து விடும் யாராவது முன்னுக்கே வந்து பிறக்கீட்டாங்களா எண்டு. பிறகென்ன அடுத்தது பூனாந்தோட்டத்துக்கு போக வேண்டியது தான். ஒவ்வொரு நாளும் ஆளுக்கு ஒரு கடகம் பிறக்காமல் வீட்ட வாறேல்ல.

அதிலும் இந்த டோர்ச் லைற் அடிக்கிற செலவுக்கு இந்தப் பனங்கொட்டை பெறுமதியானதா எண்டு எனக்கு எப்பவுமே விளங்கினதில்லை. இருந்தாலும் ஏதோ ஒண்டு இருக்கு. நானறிஞ்சு இதுவரையில் எவனும் பனங்கொட்டை பிறக்கப் போய் பனங்காய் விழுந்து அடிபட்டதோ, பனை மரத்துக்கு கீழ கக்கூசு இருக்கும் போது பனங்காயோ, கங்கு மட்டையோ விழுந்து செத்ததோ கிடையாது. இந்தப் பனங்கொட்டை பிறக்குறதிலேயே எழுதப்படாத பல சட்டங்களும், புரிந்துணர்வுகளும் இருக்கு. பிறக்கிக் கொண்டு ஒரு இடத்தில குவிச்சு விட்டால் ஒரு குஞ்சு குரும்பானும் தொடாது. எப்பவாவது மாடு ஈக்கிறதுக்கு இழுத்துக் கொண்டு போனால்ச் சரி. கடைசியில பெரிய கும்பியாச் சேர்ந்த பிறகு பக்கத்திலேயே பாத்தி வெட்டி, அள்ளிக் கொட்டி மூட வேண்டியது தான். ம்ம்ம், அப்புறமா கிழங்குக்கும்,ஒடியலுக்கும் அடிபடும் போது தெரியும் அஞ்சு மணிக்கில்ல நாலு மணிக்கே எழும்பிப் போயிருக்கணும் எண்டு.

இருந்தாலும் பக்கத்து காணிக்கார வாலுகள் ரொம்பப் படான். வளவுக்கேயே காவோலையைப் போட்டு மூடி ஒரு கொட்டிலப் போட்டிட்டு படுத்திருப்பாங்கள். பனங்காய் விழுகிற சத்தம் கேட்டக் காணும் விழுந்தடிச்சு ஒடிப் போய் பிறக்கீருவாங்கள். பத்தாததுக்கு கடகத்தால நிலத்தில அடிச்சு சத்தம் போட்டு அடுத்தவங்கள ஓட வைச்சு சிரிப்பானுகள். எங்களுக்கு பரவாயில்லை. அப்பற்ற அரசாங்கச் சம்பளம் மாசா மாசம் வந்திரும். அவனுகள் பாவம். ஒடியல வித்துக் காசாக்கினால் தான் ஒரு சைக்கிளோ , புதுச் சாறமோ கிடைக்கும். அதாலேயே நான் அவங்களோட போட்டிக்குப் போறதில்லை. இதிலும் ஒரு கள்ள வேலை. பக்கத்து ஆளில்லா வளவுக்கு எங்கட வேலியில பொட்டொண்டு வைச்சு ஆறுதலாகப் போய் பிறக்கி அது ஒரு குவியலா வளவுக்க பெரிசாகும்.

எனக்கு காலைம்பற எழும்புறதோ, கடகத்தோட அலையுறதோ பெரிய வேலையில்லை. ஆனாலும் பூனாந்தோட்ட முடக்குக்கு போகச் சரியான பயம். அங்க நிக்கிற ஒத்தைப் பனையில கொள்ளிவாய்ப் பேய் இருக்காம். அது செக்கல்ல போனால் கல்லால எடுத்து எறியுமாம். இதுவரைக்கும் ஒருத்தரும் கல்லெறிபடாட்டியும் பயம் மனசுக்குள்ள இருக்குது. பார்க்கலாம்..

December4, 2009

மண்ணாங்கட்டி.

Filed under: சமுகம் — pukalini @ 03:53

இந்த மண்ணாங்கட்டிக்கு எப்போதுமே ஒரு மிதப்பான நினைப்பு. தான் தான் இந்த உலகத்திலேயே ஒரு உத்தம புத்திரன். எங்கேயோ ஒரு கடவுளுக்கு பக்கத்தில் இருந்து சாமரம் வீச வேண்டியவன். தவறுதலாக பூமியில் பிறந்து விட்டான். இப்பூவுல வாசிகளுக்கு தான் ஒரு அபூர்வமானவன் என்ற சிந்தனை. ஏதோ ஆறடி உயரத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு டொங்கு டொங்கென்று கைகளை விசிறிய படி நடந்தால் பெரிய இவன் என்று எண்ணம்.

இப்படித்தான் இந்த மண்ணாங்கட்டி பேருந்து நிலையத்தினூடாக நடந்து போய்க்கொண்டிருந்தான். முன்னால் ஒரு சிறுமி அழுது கொண்டு வந்தாள். அவளுக்கு வயது மூன்று இருக்கும். பாடசாலையில் இருந்து வந்து இருக்க வேண்டும். முதுகில் ஒரு புத்தகக்கூடை பின்னாலே இழுத்துக் கொண்டிருந்தது. கையில் ஒரு தாத்தாக் குடை வேறு. எப்படியோ கூட வந்தவரைத் தவற விட்டிருக்க வேண்டும்.

இப்படித்தான் முன்னரும் ஒருமுறை இந்த மண்னாங்கட்டி அனுபவப்பட்டிருந்தான். அது  சென்னையில். கோயம்பேடு  பேருந்து நிலையம். ஒரு சின்னப் பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டு நின்றிருந்தது. பக்கத்தில் எவருமே இல்லை. சுற்ற முற்றப் பார்த்து விட்டு போலிசிடம் கூட்டிக் கொண்டு போனான். இடையிலேயே அவளின் அப்பா வந்து கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

ஏதோ பெரிய சாதனை செய்த மன நிறைவு மண்ணாங்கட்டிக்கு. அந்தப் பெண்  குழந்தை அப்படியே நின்றிருக்குமாம். யாராவது இனிப்பைக் காட்டி கடத்திப் போயிருப்பார்களாம். அப்புறம் என்ன நடந்திருக்குமோ? தன்னால் அந்த ஒரு கொடிய வரலாறு தவிர்க்கப் பட்டு விட்டதாக மன நிறைவு.

அதே போலவே இந்தப் பெண் குழந்தையையும் உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு செயற்கரிய காரியத்தை சாதித்த மாதிரி இருக்கும். மண்ணாங்கட்டி இவ்வளவையும் சிந்தித்துப் பார்த்து அந்தப் பாப்பாவைத் தேடத் திரும்பினான். அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது தான் ஏற்கனவே பெரும் எண்ணத்தில்  நடந்து நிறையத் தூரம் கடந்து வந்து விட்டது.

மண்டைக்குள் என்ன இருக்கோ என்று மண்ணாங்கட்டி தான் என்று தலையில் தட்டி விட்டு, விடுவிடு என்று திரும்பவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு  நடந்தான்.

November27, 2009

காதலி

Filed under: சமுகம் — pukalini @ 04:48

நானும் கன காலமாய் அந்தப் பெண்ணை பார்த்து வருகிறேன். மிகவும் அழகாய், அம்சமாய் இருப்பாள். அந்த இடத்தில், அந்த நேரத்தில் இருக்கும் பெண்களுக்குள்ளேயே அவள் தான் எடுப்பாயும், வசீகரமாயும் தெரிவாள். அவளைப் பார்த்த முதல் நாளில் இருந்து எனது காலைப் பயண நேரத்தையே அவளுக்காக மாற்றி இருந்தேன்.அவளுக்கும் தெரியும் நான் அவளைப் பார்ப்பது. எப்பவுமே அவளிடம் இருந்து ஒரு மெல்லிய சிரிப்பு வந்து கொண்டு இருக்கும்.

தொடருந்தின் உள்ளே சென்றாலும் நானும் அவளுக்கு பக்கமாகவே செல்லுவேன். சில நேரங்களில் அவளுக்கு இருப்பதற்கு இடம் கிடைக்கும்.பல தடவைகள் எனக்கும் கிடைத்திருக்கிறது. பக்கத்தில் இருந்து என்ன செய்வது அவளையே சோகமாய் பார்த்துக் கொண்டு பாவமாய் ஒரு லுக்கு விடுறது தான். என்ன அவளுக்கும் எனக்கும் ஒரு 2 அல்லது 4 வயதுகள் தான் வித்தியாசம் இருக்கும். அவள் கொஞ்சம் நிறமாய் இருப்பாள், நான் கொஞ்சம் கறுப்பு. அவளுக்கு நல்ல கறுத்த நீண்ட முடி. அதை அவள் அடிக்கடி கோதி வேறு விடுவாள். எனக்கு மண்டையைத் தான் தடவ முடியும். இருந்தாலும் என்ன? ஒரே இடத்தில தான் வண்டியில ஏறுகிறோம். இறங்கும் போது இரண்டு நிலையங்கள் தள்ளி இறங்குகிறோம். இது போதாதா இருவருக்கும் பொருத்தம் பார்க்க.?

என்னடா இது அவள் இன்று ஒருத்தனுடன் வருகிறாளே? மின்படியில் அவள் வரும்போதே நான் கவனித்து விட்டேன். மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கினேன். சே…. அவன் அவளிலும் உயரம் குறைவாக இருந்தான். சதாரணமாகத் தான் உடுத்திருந்தான். இருந்தாலும் எனக்கு வயிறு பற்றிக் கொண்டு எரிந்தது.ஒருமாதிரி என்னைத் திடப் படுத்திக் கொண்டு தூரத்தில் இருந்தபடியே ஒரு பார்வை பார்த்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்……..வண்டியில் போகும் போது இருவரும் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் இருந்து சில்மிசம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

இப்படியே சில நாட்களும் கடந்தன. ஒரு நாள் எனது நண்பனும் என்னுடன் வந்தான். பொழுது போக்காக எனது சோகக் கதையை அவனுக்கு கூறி ஆட்களையும் காட்டினேன். திடீரென்று அவன் ‘அடி செருப்பால, அது அவன் இல்லை அவள். இவ்வளவு காலமாய் இங்க இருக்கிறாய் இன்னமும் உனக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை’ என்று திட்டினான். நானும் நல்லாக் கவனித்துப் பார்த்தேன். ஆமா அது அவனில்லை அவன். அப்ப இவள்?? அவளா இவள்???


குறிப்பு:

இருந்தாலும் விடா முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தினமும் சோகப் பார்வை பார்த்துப் பார்த்து அவங்களை குழப்பியாச்சு.அந்தச் சோடி இப்பொழுதும் ஒரே நிலையத்தில் ஏறி ஒரே நிலையத்தில் தான் இறங்கும். ஆனாலும் இருவரும் ஒன்றாக இருப்பதில்லை. எல்லாத்துக்கும் பொறாமைப் பிடிச்ச பயலுகள் செய்யிற வேலை தான் காரணம். ஆனா அது நானில்லை.நானும் என்னுடைய ஆளுக்கு பக்கத்தில அடிக்கடி போய் நின்று என்னை ஞாபகப் படுத்திக் கொள்ளுறன். எப்பயாவது ஆண்களை ஏற்பாளா என்று?

October24, 2009

பொது- சேவை

Filed under: சமுகம் — pukalini @ 04:57

இரவு நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. வானத்து நிலாவை கரு மேகங்கள் மூடி மறைத்துக் கொண்டிருந்தன. சென்னையின் கடும் இருட்டைப் போக்க முயற்சித்த நிலாவுக்கும் கலைந்து செல்லும் மேகங்களின் முன்னால் தோல்வியே மிஞ்சியது. நிலாவுக்கும் அவசரம். அவளின் அம்மா அவசரமாக திருச்சிக்கு கிளம்ப வேண்டியதாயிற்று. இந்த நேரத்தில் எப்படி போக்குவரத்துகள் அமையும்?

இருந்தாலும் ஒரு ஆட்டோவைப் பிடித்து கோயம்பேட்டுக்கு போகச் சொல்லியாச்சு. அவனும் மீற்றருக்கு மேல் காசு கொடுக்கச் சொல்லிவிட்டு இடையில் கொஞ்சக் காசையும் வாங்கி பெற்றோலும் போட்டு ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்தான். போவதற்காவது அம்மாவின் பக்கத் துணை. வரும் போது எவ்வாறு திரும்பி வருவது? உலக வல்லரசுப் போட்டிக்கு அணுகுண்டுகள் வைத்திருந்தாலும் தனியாகப் போகும் பெண்ணுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்கே இடமில்லாமல் இருக்குதே.

ஆட்டோக்காரன் ஆட்டோவை ஓரம் கட்டினான். என்னப்பா என்று கேட்டதற்கு இங்கேயே இறங்கி நடந்து தான் போக வேண்டும் என்று போக்குக் காட்டி விட்டு காசையும் கறந்து கொண்டு போய்விட்டான். அவனுடன் சண்டை போடும் நிலையில் இருவருமே இல்லை.

கோயம்பேடு தனியார் பஸ் நிலையத்தை எட்டிக் கூடப் பார்க்க முடியாத தூரத்தில் இறக்கி விட்டுட்டான். இனி என்ன மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டியது தான்.   சென்னையின் கேந்திரப் பகுதி.  பள்ளமும் மேடுகளுடன் மூத்திர வாசனையையும் சுமந்து கொண்டு நின்றது. அது போதாது என்று சிலர் பெண்களைக் கண்டவுடன் அப்பொழுது தான் சலப்பை  வெடிக்கப் போகின்றதை உணர்ந்தவர்கள் போல் கைலியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். நல்ல மக்கள்.

பேருந்து நிலையத்தினை அடைவதற்குள்ளாகவே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி பெரு மூச்சாக வந்து கொண்டிருந்தது. அனேகமான எல்லாப் பேருந்துகளும் போய் விட்டன. சில பேருந்துகளுக்கு மட்டும் மாமாமார் நின்று கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். திருச்சி பேருந்து தான் முன்னுக்கே நின்றது. பரவாயில்லை. பக்கத்தில் ஒரு காவல்த் துறை அதிகாரியும் நின்று கொண்டிருந்தார். பேருந்தில் இடமும் இருந்தது. ஒரே ஒரு சீட்டுக் கேட்டாள்.

சீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு ஆட்களைக் கூவிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். திரும்பவும் கேட்டாள். பெண்களுக்கு ஒத்தை சீட்டு கொடுக்க முடியாதாம். நிலாவும் பொறுமையாக நின்று சீட்டுக் கிழிப்பவரை வேண்டிக் கொண்டிருந்தாள். காவல்க்கார மாமாவும் தான் உண்மையான மாமா தான் என்று காட்டுவது போல் கேட்டும் கேளாமல் மரம் மாதிரியே நின்றிருந்தார். அவளுக்கு  இனியும் பொறுமை கிடையாது. நீங்கள் எல்லாம் அம்மா, தங்கைகளுடன் வாழ்கிறவர்கள் இல்லையா? என்று தொடங்கி ஆர்ப்பாட்டம் பண்ணி முடித்தும் முடியாமல் அம்மாவுடன் வீட்டுக்கே திரும்பினாள்.

மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். நான் ஒரு மருத்துவர். எனக்கே இவனுகள் இப்படி சீனைக் காட்டுறாங்கள். வச்சிருக்காண்டா.  இனிமேலும் யாராவது அழுது குழறிக் கொண்டு வருவீர்கள் தானே?  அப்பொழுது தான் நானும் எனது சீனைக் காட்டுறன் என்று.

June15, 2009

ஆட்டுக்காரியும் வியட்னாமியும்.

Filed under: சமுகம் — pukalini @ 21:17

கல்லூரி  விடுமுறை கழிந்து நான் தான் முதலில் விடுதிக்கு வந்தேன். ஒரு சில மாணவர்கள் மட்டும் ஊருக்குப் போகாமல் விடுதியிலேயே தங்கியிருந்தனர். அவர்களுக்குச் சமைத்துப் போடவென்று ஒரு சமையல்க்கார பையனும் தங்கி இருந்தான். விடுதியில் இருந்து கடைசியாகப் போனதும் நான் தான். ஆகவே விடுதியில் யார் யார் தங்கி இருந்தார்கள், அவர்களின் பொழுது போக்குகள் என்னவென்று கொஞ்சமாவது தெரிந்திருந்தது. அதிலே ஒரு வியட்னாம்காரன் முக்கியமானவன்.

விடுமுறையில் ஊருக்கு போய் வரக் காசு அதிகம் தேவைப்படுமென்பதால்  உள்ளுக்குள்ளேயே தங்கி விட்டான். அவனை முதன் முதலில்  மாணவர் விடுதிக்கு வரவேற்றவனும் நான் தான். வரும் போது ஆங்கிலம் என்றால் என்னவென்றே தெரியாது. தத்தித் தத்திப் பேசினோம். உங்க ஊரில் என்ன என்ன கடவுள் எல்லாம் இருக்கின்றது என்று கேட்டதுக்கு, கைகள் இரண்டையும் விரித்துப் பிடித்து , நாக்கைத் தொங்கப் போட்டுக் காட்டினான். இயேசுவாம். பையனுக்கு குளிப்பது என்பது ஏதோ சாகடிப்பது போல. வெறும் தகர டப்பாவுக்குள் தண்ணீரை ஊற்றிக் குளித்து விடுவான். அதுக்குள் குளியல் நுரையையும் போட்டு விடுவான்.

சமையலில் அவனை அடித்துக் கொள்ள முடியாது. சமைத்தால் வாசம் வயிற்றைக் குமட்டும். ஊரில் உள்ள இலை, குழை எல்லாவற்றையும் போட்டு சமைப்பான். விசேடமாக பன்றிக் குடல். இப்படித்தான் ஒரு நாள் பாம்பொன்று வசமாக மாட்டி விட்டது. அடிச்சுப் பிடித்து அவனிடம் கொடுத்தாச்சு. அவன் அதை  அப்பிடியே தலையில் பிடித்து குடலை உருவினான். உள்ளுக்குள் இருந்து ஒரு தவளையும், ஒரு ஓணானும் கீழே விழுந்தன. அன்றைக்கு நல்லா ஒரு பிடி பிடித்திருப்பான். நாங்கள் சமையல் வாசம்  வராமலிருக்க கதவுகள் , யன்னல்கள் எல்லாவற்றையும் மூடி விட்டோம்.

அவன் எப்பொழுதும் துடிப்பாக இருப்பான். விளையாடுவான். இல்லாவிட்டால் ஓடுவான்.

இப்படித்தான் விடுமுறை காலத்திலும் வெளியில் ஓடப் போயிருக்கான். பல நாட்கள். விடுமுறை கழித்து வந்ததில் அவனில் பல மாற்றங்கள். வெளியில் போவதில்லை. ஓடவும் தான். விடுதிக்குள்ளேயே அடைந்து கிடந்தான். என்ன ஏதென்று ஒன்றுமே புரியவில்லை.

அப்புறமாக சமையல்க்காரப் பையன் மூலம் தகவல்கள் மெது மெதுவாக வெளியே கசிந்தது. பையன் ஓடப் போகிற வழியில் ஒரு பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறது.  அப்படியே அடிக்கடி ஓடப் போய் பெண்ணை சரிக்கட்டி விட்டான். அப்புறம் என்ன? ஒரே அசால் குசால் தான்.

இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு நாள் ஊர்க்காரர்கள் பார்த்து விட்டார்கள். பையன் ஒரே ஓட்டமாக ஓடி விடுதிக்குள் புகுந்தவன் தான். வெளியே போகவில்லை. கல்லூரியில் மணிப்பூர் மாணவர்களும் படித்த படியால் யாரென்று தெரியாமல் ஊர்க்காரள் சமையல்க்காரப் பையனிடம் விசாரித்திருக்கிறார்கள். அவனும் பாவம் பார்த்துக் காட்டிக் கொடுக்கவில்லை.

அதுக்குப் பிறகும் அவன் அடங்கவில்லை. படித்துக் கொண்டிருந்த சில மாணவிகளை நல்லாவே அப்ரோச் பண்ணினான். மாட்டிச்சா இல்லையா அவனுக்குத் தான் வெளிச்சம். எப்படி இவனால் மட்டும் ஆட்டுக்காரியைக் கூட அப்படி நினைக்க முடிந்திருக்கிறது. கூடப் படிக்கிறதுகள் என்றாலும் பரவாயில்லை. அந்த மாதிரிப் படங்களிலும் அவன் உள்ளூர் தயரிப்புகளையே விரும்புவான். வித்தியாசமானவன்.அவன் ஆசைப் பட்டிருக்கான். அடைஞ்சிருக்கான்.

அப்பாடா இந்தப் பொண்ணுகள்/ பசங்கள் ஏன் தான் வெள்ளைத் தோலைக் கண்டால் இப்படி கிளர்கிறார்களோ? அதிலும் ஆடு மேய்க்கும் பெண் எப்படி இவனுடன் பேசியிருப்பாள்? பேசாமலேயே …………….. ம்.

கடைசியில அவனும் ஊருக்குப் போயிட்டான். ஒரு நாள் யாகுவில் வந்தான். அடக்க முடியாமல் ஆட்டுக்காரியை எப்படி சரிக் கட்டினாய் என்று கேட்டேன். ‘எல்லாம் எண்ட கலர்’ எண்டு சொல்லி செருப்பாலேயே அடிச்சான்.

June10, 2009

பாலான விளம்பரக் கருக்கள்.

Filed under: சமுகம் — pukalini @ 06:05

உள்ளுக்குள் இருப்பது மிகவும் அருவருப்பாக இருக்கலாம். என்ன செய்வது நானும் தான் அருவருப்புடன் எத்தனையோ விளம்பரங்களைப் பார்க்கின்றேனே?  வாசனை அடிச்சா உலக அழகியே பக்கத்துல வந்து  தடவிக் கொடுப்பா. அதுக்கு கீழே உள்ளதெல்லாம் கொஞ்சம் மிகையாவே இருக்கலாம்.


1. இவர் ஒரு பாரிய பிரபலம். தக்க வயதில் ஒரு மகளும் உண்டு. இவரை வைத்து எப்படி விளம்பரம் (வியாபாரம்)பண்ணலாம்? ஆணுறைக்கு?

அப்பன் வீட்டு முற்றத்தில்பழுதடைந்த மின் குமிழை சரிப்பண்ணிக் கொண்டு இருக்கின்றார். மகள் வெளியே கிளம்பிப் போகின்றாள். இப்பொழுது அப்பன் பெருமூச்சு விட்டவாறே  நிழல்க்கருவியைப் பார்த்து சொல்கிறார் ‘ இப்பொழுதெல்லாம்  மகள் வெளியில் போகும் போதெல்லம் நான் கவலைப் படுவதே இல்லை. நான் தான் அவளுக்கு ——– ஆணுறை வாங்கிக் கொடுத்திருக்கேனே? அது மட்டுமா நம்ம நாட்டு படிச்ச எருமைங்கள் எல்லாம் புதுமை பேசினாலும்  கட்பு, கண்ணி என்று புலம்புவார்கள். அதனால பார்த்து பின் வாசல உபயோகிம்மா என்றும் சொல்லி வைத்திருக்கின்றேன். என் மகள் என்னை மாதிரியே சமத்து. என்னா மாதிரி அசத்துறா பாருங்களேன்’. முடிஞ்சுதா?

அப்புறம் பொண்ணு நாலு வாலுகளுடன் கும்மி அடிக்கும் ஒரு காட்சி.  விளம்பரம் தத்ரூபமா வரும்.

2.அடுத்தது ஒரு கிரிக்கெட் பிரபலம். இவரைக் காலணிக்கு உபயோகப் படுத்தலாம்.

வீரர் பாய்ந்து, விழுந்து ஓடுகின்றார். காலையே படம் பிடிக்கலாம். அப்பொழுது தானே காலணி தெளிவாகத் தெரியும். களைச்சு விழுந்து ஓட்டம் முடிந்த பிறகு காலணி அழுக்கைத் தட்டிய படியே சின்னதா ஒரு வாக்கு மூலம்.

‘இதனால நான் மட்டும் ஓடல, என்னுடைய அம்மா வயசு 56. பக்கத்து வீட்டு  சின்னப் பொடியுடன் தீராக் காதல் கொண்டு ஓடிட்டா. இன்னமும் கண்டு பிடிக்க முடியலன்ன பாருங்களேன். அவவும் போட்டிருந்தது இந்த மாதிரிக் காலணி தான்.செமையான ஓட்டத்துக்கு நீங்களும் உபயோகியுங்கள்.’


3.மற்றவர் சினிமாப் புள்ளி. கொஞ்சமல்ல ரொம்பவே வயசாயிடுச்சு. இவருக்கு தோதாக கைப் பேசியைப் போடுவம்.

இவருக்கு பாக்கியம் கைப்பேசி விளம்பரம். ஏனென்றால் இவருக்கு கிடைக்காத பாக்கியம் அதுக்கு கிடைச்சிருக்கு.முதல்ல கைப்பேசியைச் சுற்றிச் சுற்றிக் காட்டிய பின் அதைப் பற்றி  இப்படி ஒரு தத்துவம் சொல்ல வைக்கலாம்.

‘இதைப் பாருங்க,இது விசேசமானது. இதன் அதிர்வுகள் மேலும் விசேடமானது.  குறுகிய இடத்தில், மிகவும் ஆழத்தில் இருந்தாலும் தொடர்பிலேயே இருக்கும். குளிரான இடங்களில் தானாகவே சூடாகும்.  நான் வெளியூரில் இருக்கும் போதெல்லாம் என் பொண்டாட்டி இதனாலேயே தொடர்பு வைத்து சந்தோசமாக இருப்பா. நீங்களும்  உங்கள் ,உங்கள் மனைவிமாருக்கு வாங்கிக் கொடுங்கள்.’

4. இன்னுமொரு சினிமாப் புள்ளிக்கு குளிர் பான விளம்பரம்.

நிறையவே  சூடாகி, மூஞ்சி அப்படியே செக்கச் சிவக்க கடைக்குள் வருகிறார்.  குளிர்ப் பெட்டிக்குள் இருந்து எடுத்தார் ஒரு தகர டப்பா. மடக், மடக் உள்ளுக்க இருந்ததை அப்படியே விழுங்கிய பின், முகத்தில் வியர்வை அடங்க நல்லாவே குளிராகின்றார். அப்புறமா கத்தத் தொடங்குகின்றார்.

‘ நான் நல்லவன் கிடையாது. அதுக்காக என் பொண்டாட்டியும் நல்லவள் கிடையாது. போட்டி போட்டு மாத்தி, மாத்தி சோடி பிடிச்சம். கடைசியில அவளுக்குத் தான் அதிக  துணைகள், அதிக இரவுகள். நான் ஆணாச்சே? கடைசியில எண்ணிக்கையைச் சரிப்படுத்து  பக்கத்து வீட்டு ஜிம்மியையும் கெடுக்க வேண்டியதாயிருச்சு. ஆனாலும் பாருங்க இதைக் குடித்த உடனேயே எல்லாம் பஞ்சாய்க் காற்றில் பறந்திடுச்சு.’

அப்படியே அந்த டப்பாவை நல்லா சுற்ற வைத்து முடிக்கச் சரி.

5. கடைசியாக சினிமா நடிகைக்கு ஒரு தொலைக்காட்சி.

வந்தவுடனேயே தொலைக் காட்சியை அணைத்த படி அதன் பெருமை, அருமைகளைச் சொல்லுகின்றா,

‘ இதைப் பாருங்க என்ன தான் தட்டையா பெட்டிகள் வந்தாலும், நமக்கு தள்ளிக் கொண்டிருப்பது தானே பிடிக்கும். அதனாலேயே இந்தப் பெட்டி. இதற்க்கு எல்லா விதமான உள்ளீடுகளையும் ஏற்றுக் கொள்ளும்  முறையில் வாங்கிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. சிறிதளவு சக்தி போதும், உடனடியாகவே காட்சிகள் தெரியும். தொலைவில் இருந்தே இயக்கியும் காட்சிகளைக் காணலாம்’.

முற்றும்.June5, 2009

விலங்கு.

Filed under: சமுகம் — pukalini @ 04:18

அவன் பெயர் ரங்கன். உழைப்பாளி. நாட்டு நடப்புகளில் தெளிவு கொஞ்சம் குறைவு. முகவும் நல்லவன். அவனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவன் வேலை செய்யும் முதலாளியின் சித்தப்பா மகளுக்கும் ரங்கனுக்கும்  முடிவானது.

கன்னிமொழி. ஊருக்குள் அவள் தான் அழகி. கீறி விட்ட பப்பாசிப் பழம் போல செம்மையான தேகம்.  அசத்தும் அழகுப் பேழை. கலியாணம் முடிவானதும் இருவருக்கும் இடையில் காதல் கோளாறுகள் தொடங்கின. இரவு, பகல் பனி, மழை பாராமல் கொஞ்சலும், குலுங்கலும் அசர வைத்தன. பச்சைப் பசேலென்று பரவிக் கிடக்கும் வயல் வெளிகளும், மடை திறந்து சலசலத்து ஓடும் ஆற்று நீரும் சலித்துப் போயின. நேரங்காலம் தெரியாமல் வீட்டு  வேலிக்கப்பால் கேட்கும் விசில் சத்தம் கன்னிமொழியின் தூக்கத்தை விரட்டி விடும்.

வந்தான் வில்லன். தயா. பெயருக்கும் ஆளுக்கும் சந்தேகப் படும் தொடர்பு. கன்னிமொழியின் அடுத்த வீட்டான். நிறைய நாட்கள் கன்னிமொழியுடன் சொப்பனக் குடும்பம் நடத்தியவன். அவளுக்கும், இளிச்ச வாயனுக்கும் கலியாணமா? அவனுக்கு கொடுத்து வைத்திருக்குது. எனக்கு? முடிவு கள்ளுக் கொட்டகையில் தீர்மானமானது.

திருமணம் ஆகி 2 வருடங்கள் சடுதியாய் கரைந்து போக ஒரு குழந்தையுடன் கனிமொழி குடும்பம் நடத்தினாள்.

தயாவின் உள் அரிப்பு இன்னமும் தீர்ந்த பாடாகவில்லை. ‘டேய் ரங்கா உன் பொண்டாட்டியோட நான் ——-.

போய்ப் பாருடா’.

ரங்கனுக்கு என்னது அடுத்து என்று தெரியவில்லை.வீட்டுக்கு வந்தான். பொண்டாட்டியை கூட்டி அறைக்குள் போனான். கையிலில் விளக்கு. அப்படியே மனைவியின் பாவாடையைத் துக்கி விளக்கு வெளிச்சத்தில் எதையோ முறைத்துப் பார்த்தான். இருக்காது.

கப்பல் கடலில் போனாலும், வயலில் ஆயிரம் கலப்பை கொண்டு உழுதாலும் விளைச்சல் ஒன்று தான்.

ஆரம்பித்தது சனியன். இருவருக்கும் இடையில் இனம் புரியாத ஒரு விலகல். கன்னிமொழி என்ன செய்வாள்?  புருசனுக்கோ சந்தேகக் கோடு பெரிதாகிக் கொண்டே போனது. முடிவு வருசத்துக்கு ஒன்றாய் குழந்தைகள். பொண்டாட்டி விட்டுப் போகாமலிருக்க.

அவளுக்கும் உலகம் புரியவில்லை. தன் புருசன் கெட்டிக்காரன். புகுந்து விளையாடுறான் என்ற நினைப்பில் இருந்து விட்டாள்.எல்லாருமே புகுந்து விளயாடுவார்கள் தான் களமமைச்சா என்பது இன்னமும் புரியாமல் அடுத்த குழந்தையை வயிற்றில்  சுமக்கிறாள்.

June4, 2009

தலையாட்டி இரையா?

Filed under: சமுகம் — pukalini @ 01:57

நிறையப் பைத்தியங்கள் உள்ள இடத்தில் சில தெளிவுகள். தெளிவுகளின், தெளிவுகளினால் பைத்தியங்கள், பைத்தியம் முத்திப் போய்  நடுத்தெருவில் குத்திக் குமுறுகின்றன. தெளிவுகள்  தாமே அருகதை உள்ளவர்கள், அருகாமையில் இருந்தவர்கள், அருமையானவர்கள் என்று பின் பக்கம் வீரிட்டு எரிய, எரிய எழுதுகிறார்கள். துரோகிகள், வால் பிடிப்பவர்கள் வித்தியாசங்களை இப்பொழுது தான் உணர வைக்கிறார்கள்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், சிந்தனைகள், வழிமுறைகள். சிலருக்கு சிலது ஒத்துப் போகும், சரியாகும். தொடங்க முடியாதவர்கள், தொடருவார்கள். சிலர் தொடங்க வேண்டும் என்றே தொடங்குவார்கள். நல்லது. முன் முயற்சி. பாராட்டப் பட வேண்டியவைகள். ஆனால் இலக்கு?  இலக்கு நோக்கிப்  போகிறவர்களையும் பிராண்டி வேதனைப் படுத்துவார்கள். தம்மால் முடியாதவைகளை இவர்கள் எப்படி பண்ணலாமென்றொரு  குமைச்சல்.

ஆக மொத்தம் இலக்குத் தவறி வீரியமானவர்களின் வீரியத்தை கசக்குவதில் முனைப்பு. கேவலம் வீட்டில் இருக்கும் வளர்ப்பு நாயுடன் பங்கு போட முடியாதவர்கள் தெரு நாயுடன் எப்படி சண்டை போடுவார்கள்? அப்படியானின் வழி நடப்பவர்கள் சிந்திக்கத் தெரியாதவர்களா? அறிவிலிகளா? அவர்களும் மூளை உள்ளவர்கள் தான். பாதை கரடு முரடானதாக இருந்தாலும் செப்பனிட்ட பாதையில் நடக்க பிந்தப் போவதில்லை. போய்ச் சேர வேண்டிய இடம் தெளிவாகத் தெரிந்தது. இப்பொழுது மேக மூட்டங்கள் மறைத்த போது பாதை காட்ட முயலுகிறார்கள்.

கேவலமான பைத்தியங்கள். உலகம் தெரியாதவர்கள். உலகம் போற போக்கும், நடப்பும் அறியாதவர்கள். அப்பாவுக்கு அம்மா சாப்பாடு போடும் போது அப்பா விட்ட குசுவில் சூல் கொண்டு பிறந்த  சூனியங்கள். இவர்களின் தந்தையரோ, தாயுடன் யுகக் காலம் கலந்து பீய்ச்சி அடித்த பாய்மம், பலோப்பியன் குழாய் போகாமல் கருப்பையுள் சப்பித் துப்பிய சுவிங்கம் போல ஒட்டிக் கருக் கட்டி பிறந்தவர்கள்.  பொங்கிப் பெருகும் அறிவுக் கடலுக்கு மடை போட்டு அடைப்பவர்கள். எப்போதாவது மக்கிய மடையால் கசிபவைகளே உலக்த் தரம் வாய்ந்தவை.

சாரு.அழகு மீசைக்கும்,சர்ச்சைக்கும் முகம் வைத்திருப்பவர். சுந்தரத் தமிழில் எழுதுவார். பாணி, நடை, தமிழ் கொள்ளை கொள்ளும். ஆனால் எழுதுவது  பிடிக்காது. ஆனாலும் படிக்கப் படுபவர். அவருக்கு பிடித்ததை எழுதுறார். படியுங்கள். இல்லாவிட்டால் ஓரமாக ஒடுங்குங்கள். தனி மனித இயல்புகள் மாற்றப் பட முடியாதவை. தனிப்பட்ட விரோதியா? சந்திக்க முடிந்தால் என்னால் முடிந்த ஒரு கோக்.

சரி, மாற்றுக் கொள்கைக்காரங்களை துரோகிகளாக்கி பொட்டு வைச்சு வழி அனுப்பீட்டாங்கள் என்று முந்தா நாத்து பேண்ட பீயைக் கிளறி மணப்பவர்கள் என்ன செய்தார்கள். பாவம் சாரு. முறைச்சுட்டுப் போனானே என்று கவலைப் படுகிறார். கேவலம் எழுதுறவனையே கடுப்படிக்கிறவங்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து சண்டை போட்டால் கொஞ்சிப் போட்டு அனுப்பபீருப்பாங்களாக்கும்.

முடிந்தால், பழைய மாணவர் கூட்டத்துக்கு போகவில்லை, பொண்டாட்டி மல்லாக்கப் படுக்க மாட்டெண்டுரா எண்டு தலைப்பு வைக்கத் தான் சரி.

June2, 2009

பட்டை.

Filed under: சமுகம் — pukalini @ 19:04

காலையிலேயே முற்றத்தில் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. வாங்கிலில் காலை அகட்டிப் படுத்திருந்த எனக்கு முதுகுக்கு கீழே வியர்த்திருந்தது, அப்பொழுது தான் குளிரத் தொடங்கி இருந்தது. எப்பவும் இப்படித் தான். தலையை மாற்றிப் படுப்பம் எண்டால் விடுறதில்லை. சவத்தைத் தான் தெற்கு வாட்டில் படுக்க வைப்பார்களாம்.  வேற யாரு இந்த நேரத்தில் ஓலையைக் கிழிக்க முடியும். கண்டிப்பாக அப்பு தான்.

நேற்று பின்னேரமே கிணற்று முற்றத்தை அடை கட்டி மண்ணைப் போட்டுட்டு,  தண்ணி அள்ளி ஊற்றிக் கொண்டு இருந்தவர். பிறகு ஓலையை நனையப் போட்டிருக்கலாம். அது தான் காலங் காத்தேலேயே எழும்பி பட்டை பிடிக்கிறார்.  அதுவே ஒரு கலை. ஊரில் பட்டை பிடிக்கத் தெரிந்தவர்கள் கொஞ்சப் பேர் தான்.அதிலும் சொன்னபடி  கேட்கிற மாதிரிப் பட்டை பிடிக்கிறதில அப்புவை மிஞ்ச முடியாது.

பருவ காலத்தில் வேலி அடைப்புக்கு பனை ஓலை வெட்டும் போதே அப்பு பட்டை பிடிக்கிறதுக்கு எண்டு ஓலைகளைத் தெரிவு செய்து வைத்து விடுவார். அது எப்படியும் ஒரு மூலையில் தோட்ட காலம் வரும் வரை  கிடக்கும். அப்புறம் தான் அதன் தேவை. சிலருக்கு பட்டையும் பிடிக்கத் தெரியாது, ஓலையும்  எடுத்து வைக்கத் தெரியாது. கடைசி நேரங்களில் வந்து அப்புவிடம் திட்டு வாங்குறது பத்து வீட்டுக் கேட்கும்.

ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய ஓலையை பதமாக எடுத்து  அடியில் இருக்கும் கருக்கை வெட்டி விட்டு ஒரு சாண் நீளத்தில் மடிக்க வேண்டும். அங்கிருந்து ஒரு முழத்துக்கு எடுத்து ஈர்க்குகளை வளைத்து  திரும்பவும் ஒரு சாண் விட்டு ஈர்க்குகளை முறியாமல் மடித்து, ஓலையின் இரு நுனிகளையும் இணைத்து கட்ட வேண்டும். பாரம் தூக்க வசதியாக மரக்கட்டையை வைத்துக் கட்டி கைப்பிடியும் சரிக்கட்டினால் பட்டை தயாராகி விடும். பார்ப்பதற்கு குட்டிப் படகு போலிருக்கும் பட்டையின் அளவைப் பொறுத்து தண்ணீரின் அளவும் வேறுபடும்.

பட்டையை செய்யுறது மட்டுமில்லை, பாவிப்பதும் மிகக் கடினம். அப்பு அதனையும் எனக்கு சொல்லித் தந்தார். ஆனா பட்டை செய்யுறதுக்கு சொல்லித் தரவில்லை. தன்னுடன் போய்ச் சேரட்டும் என்றோ தெரியவில்லை.

மழைகாலத்தில்  கை விட்டு அள்ளும் ஆழத்தில் மிதக்கும் தண்ணீரை பட்டையில் அள்ளி பதி வைக்கப் பட்டிருக்கும் கன்றுகளுக்கு ஊற்றுவது நூதனமாகும். தண்ணீருக்குள் கையை விட்டு, வெளியே அள்ளி ஊற்றி விட்டு கீழே விழும் தண்ணீரைக் கையால் அணைத்து கீழே விழச் செய்ய வேண்டும். அனுபவப் பட்டவர் ஊற்றினால் தெரியும். அப்படியே வட்ட வடிவாய் தண்ணீர் விழுந்து சிதறிய அடையாளம் ஈரலிப்பாய் துலங்கும்.

எனக்கு அது கூடக் கைவரவில்லை. தண்ணீரை அப்படியே மொண்டு ஊற்றி செடிகளின் புது இலைகளை உடைத்தது தான் மிச்சம். அப்புவின் கழுகுக் கண்களுக்கு எப்படியும் மாட்டி விடும். அப்புறம் என்ன? தோட்டத்தில் கிடக்கும் மண்ணாங்கட்டிகள் எல்லாம் பல் குழல் ஏவுகணைகள் போல் என்னை நோக்கிப் பறக்க, நானோ ஒதுங்க இடமில்லாமல் புதுமாத்தளனில் மாட்டியவன் போல் ஓடுப் பட்டு திரியவும் சரியா இருக்கும். போதாதற்கு வசை மழை வேறு. ‘உனக்கு ஓ—– சாமனை இறைப்பில விட்டா என்ன?’  என்ன அர்த்தமோ தெரியவில்லை.  வேலையில் பழுது கண்டா அப்புவிடம் தப்ப முடியாது.

அதிலும் பாரம் தாங்க முடியாமல் பட்டையைக் கீழே வைத்தாலோ, சரி அப்பளம் மாதிரி நொருங்கி விடும். தண்ணீரை வெளியாக்கி விட்ட பின்னர் தான் கீழே வைக்க முடியும். தட்டுப் பட்டாலோ வெடித்து ஓட்டை வந்து விடும். பிறகு அந்த ஓட்டை அடைக்க தாரைப் போட்டோ இல்லை றெஜிபோமை பெற்றோலில்  நனைத்து உருக்கியோ ஒட்ட வேண்டும்.

இப்பொழுதெல்லாம் தகரப் பட்டைகள் வந்தாலும் ஓலைப் பட்டைக்கு தான் மவுசு அதிகம். செலவு குறைவு. அடுத்தது பாரம் குறைவு. இப்பொழுது காலம் மாறிப் போச்சு. யாருக்கு பட்டை பிடிக்கத் தெரியும். சாதாரண கூழ்ப் பிளாவே பிடிக்கத் தெரியாத நானெல்லாம் என்னத்தை சாதிக்க முடியும்.

அப்புவுடன் பட்டையும் போச்சு….

May30, 2009

அப்பு செத்திட்டார்….

Filed under: சமுகம் — pukalini @ 19:18

அந்தி மயங்கும் மாலை வேளை. கைத்தொலைபேசி  என்றுமில்லாதவாறு அலறியது.தகவல்,அப்புக்கு சுகமில்லையாம், உடனே கிளம்பி வரவுமாம்.இப்போது பொழுது பட்டு விட்டது. இனிக் காலையில் தான் புறப்பட முடியும். இரண்டு சோதனைச் சாவடிகளையும் கடந்து ஊர் போய்ச் சேர எப்படியும் நாளை மதியம் கடந்து விடும்.

இதற்கிடையில் அப்புக்கு என்ன வந்தது?

எழுபது வயதிலும் கம்பி போல திரிந்து கொண்டிருந்தவர். கடந்த வாரம் கூட என்னைப் பார்க்க வந்து, வங்கியில் தன் பெயரில் இருந்த பணமெல்லாத்தையும் என் பெயரில் மாற்றி விட்டுத் தான் போனவர். அதிலும், குடித்து விட்டு கும்மாளம் போடுவார் என்றெண்ணி வெறும் பயணச் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு வழி அனுப்பினேன். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் பாவம் அப்பு தண்ணி குடிக்கக் கூட காசு குடுக்கேல்லையே என்று கவலையும், பயமும். காலையில் தகவல் வருகிறது, அப்பு நல்ல மப்பில் தான் வீட்ட வந்தவராம். எப்படி? அவர் எப்பொழுதும் இப்படித் தான் என்ன செய்வார்? ஏன் என்று புரிவதில்லை.

பிறந்து, வளர்ந்தது முதல் அப்பா, அம்மாவை விட அப்புவும், அம்மம்மாவும் தான் என்னை வளர்த்ததும், சீராட்டியதும் அதிகம். என் முழுப் பொறுப்பும் அவர்களில் தான் தங்கி இருந்தது. போடுற யட்டியில் இருந்து கையில் கட்டும் தங்க மூலாமிட்ட கடிகாரம் வரைக்கும். ஊரில் எவனாவது புதிதாக வந்திருந்தாலோ, பெடியள் ஏதாவது போட்டிருந்தாலோ அவர்களுக்கு மோப்பம் பிடித்து விடும். டேய் பொக்ஸ் சேட் எண்டு வந்துருக்காம், வாங்கிப் போடன். எனக்கு என்னெண்டே தெரிந்திருக்காது. கடைக்குப் போனாத் தான் தெரியும். டேய் அவன் புதுச் செருப்புப் போட்டிருக்கானாம். நீயும் வாங்கடா….அப்புவுக்கு தீபாவளி, தைப்பொங்கல், வருடப் பிறப்புகளுக்குத் தான் புது உடுப்பு வரும். புது உடுப்பு எனக்கு, எனது பழைய உடுப்பு புதிதாக அவருக்கு.

அவர்களுடன் தங்கினால் ராஜ யோகம் தான். காலையில் ஐந்து மணிக்கே எழுந்திருந்து தேநீர் போட்டு தலை மாட்டில் வந்திருக்கும். அம்மம்மாவுக்கும் சேர்த்து. சிலவேளைகளில் சுருட்டுப் பிடித்துக் கொண்டு வானொலிப் பெட்டியைத் திருகிக் கொண்டிருப்பார். அதிலும் காலை வேளையில் ஐபீசி கேட்பன் என்று தெரிந்து குறுக்கலையில் மீட்டர் போட்டுக் கொண்டிருப்பார். அப்பேயும் காதும் கூர்மை. இல்லாவிட்டால் நான் கொண்டுபோயிருக்கும் பொன்னியின் செல்வனை எங்காவது ஒரு பக்கத்தில் இருந்து புரட்டுவார். ஆங்கிலப் புத்தகங்களாக இருந்தால் படம் பார்ப்பார். இது வரைக்கும் அப்பு பள்ளிக் கூடம்  போனதாகச் சொன்னதில்லை. இருந்தாலும், மாலை வேளைகளில் வாசிகசாலை போய் பத்திரிக்கை படிக்காமல் விட்டதில்லை. அம்மம்மா சொல்லி இருக்கா, வெள்ளைச் சட்டைக்கு முட்கிளுவை  முள்ளைக் குத்திக் கொண்டு பள்ளிக்குப் போனதாக.

தோட்ட வேலை நேரங்களில் அப்புவைப் பிடிப்பது கடினம். காலையிலேயே எழுந்திருந்து கிளம்பி இருப்பார். தூக்கக் கலக்கத்தில் நானும் கூடப் போவன். நாம் வெயில் கிளம்ப முன் வீடு திரும்ப , அப்பொழுது தான் ஊர்ச் சனம் வேலைக்குப் போகும் வெயிலுக்க காய. அப்புவிடம் எப்பொழுதும் ஒரு கூட்டம் பின்னுக்கு நிக்கும். ஆலோசனை கேட்கவும், மேற்பார்வை இடக் கேட்கவும். அப்புவின் திறமைக்கும், ஆலோசனைக்கும் சாட்சிகள். அதிலும் கொடுக்கும் கூலியும் அதிகம், தண்ணி தனியாக. அப்பொழுது தான் அடுத்த முறை அப்பு போவார். இருந்தாலும் மதியம் வீட்டுக்கு கள்ளு கலனில் வந்திரும். மாதக் கடைசியில் தான் காசு. எனக்கென்றால் தனியாக ஒரு போத்தலில் தனிப்பனைக் கள்ளு.


அப்பு அடிக்கடி அம்மம்மாவை சொல்லித் திட்டுவது வேலைகாரனுக்கு கூழ், ஓக்—கிறவனுக்கு கஞ்சி எண்டு. அதாவது அம்மம்மா என்னை நல்லாக் கவனிக்கிறாவாம். இருபது வயதிலும் சோத்து மாடு மாதிரி சுத்திக் கொண்டு திரிஞ்ச எனக்கு எல்லாமே அதிகம் தான். அதுகும் தோட்ட வேலைகளுக்குப் போய் வந்தால் மதியம் கடல் தாமரை வங்கி வந்து வேலியில் தொங்கும்.  இடுப்பு நோவுக்கு நல்லதாம். அப்பு தான் கழுவிச் சமைப்பார். நல்லாக் கழுவாட்டி மணக்குமாம். மாலை வேளைகளில் பெரிய அண்டாவில் தண்ணி சுடவைத்து ஒரு குளியல். சும்மா வெயிலுக்கு ஒதுங்கி, நிழலுக்க இருந்தவனுக்கு. நாள் முழுவதும் வெயிலுக்க காய்ஞ்சவருக்கு வெறும் சாயா மட்டும். பொத்திப் பொத்தி வைச்சு என்னத்தைக் கண்டினமோ?

இருந்தாலும் அப்புவுக்கும், அம்மம்மாவுக்கும் மனசில் ஒரு கவலை. அவர்களின் பிள்ளைகள் எல்லாம் மக்காச் சோளம் போலிருக்க, நான் மட்டும் கரடி நிறத்தில இருக்குறன் எண்டு. என்ன செய்யிறது எங்க அப்பா அப்பிடி?


அப்புவிடம் நான் கற்றது உழைப்பு.அடுத்தது தன் நம்பிக்கை.

அப்பு வருவார்..

May24, 2009

பதிவர்கள்..

Filed under: சமுகம் — pukalini @ 04:46

1.அவன் ஒரு கவிஞன். புலவன். பண்டிதன். இலக்கியம் அவன் இலட்சியம். கவிதை புனைவதில் கில்லாடி.படிப்பவர்களை சொக்க வைப்பதில் சூரன். கலியாணம் முடிந்து மூன்று வருடங்களுக்கு  பின்னர், இப்பொழுது தான் தெய்வ கடாட்சம் பட்டு தந்தையாக மாற சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. நேர்த்திக்  கடனடைக்க  பழனிக்கு  மொட்டை போடப் போன வழியில், குடும்பமே கூண்டோடு கைலாயம் போக, இவன் மட்டும் மிஞ்சினான். சாவீட்டில் ஒருத்தன் ” கவிஞரே உங்கள் குடும்ப சாவுக்கு ஒரு இரங்கல் பத்திரிகை அடிக்கப் போறோம் ஒரு இரங்கல் கவிதை எழுதித் தருகிறீர்களா?” என்று கேட்டான்.

2. குடும்பத்தில் ஒரே பையன். வயது 12 தான் ஆகுது. கிரிக்கெட் என்றால் உயிர். சச்சின் என்றால் உயிரையும் விடுவான். எப்பொழுதும் மட்டையும் கையுமாகத் தான் தரிசனம். தெருப் பையன்களுக்கு அவன் தான் டோனி.  என்ன நடந்ததோ? யார் கண் பட்டதோ? வைசூரி வந்து  மண்டையப் போட்டிட்டான். குடும்பத்தாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நேரம் பார்த்து ஐபில் கிரிக்கெட் போட்டிகள். பையனுக்கு பிடித்த கிரிக்கெட் ஆச்சே என்று செத்த இளம் பிரேதத்தின் முன் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

3.15 வயசு. 18 வயசுத் தோற்றம். சுண்டி இழுக்கும் அழகு. இமைக்க மறக்கும் இளமை. ஆட்டம்-பாட்டம் என்று ஒரே அட்டகாசம். ஆனால் இன்னமும் சின்னப் பிள்ளை மாதிரித் தான் நடத்தை. நாட்டியத்தில் தூள் கிளப்புவாள். பள்ளியில் ஆடுவதைப் பார்த்து ஒரு பாட்டுக்கு ஆடக் கேட்டார்கள். போனவள் திரும்பி  வரவில்லை. பிய்ந்து போனவளாக மருத்துவமனையில் கிடந்தாள். குருதிப் பெருக்கு நிற்கவில்லை. எத்தனை பேரோ? துக்கம் விசரிக்க வந்த ஒருவர் அன்னையிடம்  ‘நீங்களும் செம கட்டையாத் தானே இருக்கீங்க, ஒரு சீனுக்கு வாறிங்களா’ என்றான்.


நாட்டு நடப்பு இப்படித் தான் இருக்கு. அதுக்குள்ள மொழி, இனம், நம் சனம் என்று எவன் புத்தி தடுமாறிப் பிதற்றுவான். இணையத்தில் தமிழ் ஏற்றப் பட்டு வாழ வழி செய்தவர்கள் எல்லோரும் வாழ்வுக்கு வழிதேட, இணையத்தில் வந்த ஒன்றை சுட்டுட்டானாம். முன்னுக்கு குத்துறவனை விட பின்னால குனிய விட்டு குத்துகிறார்கள். தமிழின் இழவு கொண்டாடுவோம்.

May8, 2009

விகடன் – பதிவர்களின் இலக்கா?

Filed under: சமுகம் — pukalini @ 18:27

அண்மைக்காலங்களில் பதிவுகளில் வரும் அதிகமான தலைப்புக்கள்.

1.ஈழத் தமிழர் பிரச்சினை.2.இந்தியத்  தேர்தல்.3.விகடனில் எனது பதிவு.

பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் வார இதழேறுவது மகிழ்ச்சி. வாசிப்பாளராக இருந்தவர்கள், படைப்பாளிகளாகி விட்டனர். மெத்தச் சந்தோசம். அவர்களின் திறமைகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம். அவற்றினை சகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். இரட்டிப்பு சந்தோசம்.

இனி, எனது குறை மூளையில் உதித்த சில சிந்தனை முத்துக்கள்.

உலகம் உருண்டையானது. சுற்றிச் சுற்றி ஒரே இடத்துக்குத் தான் வர வேண்டும். அறப் பழைய பழமொழி. எல்லோரும் ஏன் ஒரே மாதிரி தட்டையாகவே யோசிக்க வேண்டும். வரைபில் தட்டை வளர்ச்ச்சி கிடையாதே? குத்தெனெ மேலெழும்பி ஒளியை விட பல்லாயிரம் மடங்கு வேகத்தில் செக்கனுக்கு பயணித்தாலும் கண்ணுக்கு முன் அண்டம் பிரமாண்டமாய் விரிந்து கொண்டு செல்லுமே? பின்னர் ஏன் குண்டுச் சட்டிக்குள் குமிழி  உருட்ட வேண்டும். விகடன் மட்டுமே குறிக்கோளா? ஆக்கத்தின் உச்சியா?  உங்களது எண்ணங்களுக்கும், கற்பனைகளுக்கும், எழுத்துக்களுக்கும் அளவு கோலா?

அப்படியாயின் புக்கர் பரிசு ஒருத்தருக்குமே வேண்டாமா? வெல்லப் படமுடியாத,  அடைய முடியாத அல்லது தெரியாத விடயமா?

அடுத்தது, தினமும்  நூற்றுக் கணக்கில் பதிவுகளை வாசித்து வரும் எனக்கு ஒரு நாள் கூட விகடன் பக்கம் போக மனசு வந்ததில்லை. இவர்கள் சொல்லும் பதிவுகளை பெரும் பாலும் நான் படித்தே இருக்க மாட்டேன். என்னுடைய தேடல்கள் வேறுபட்டவையா? அப்படியாயின் விகடனின் தெரிவு முறை என்ன? வெறும் கவிதை, சிறுகதை, குட்டிக் கதைகள் மட்டும் தானா? எத்தனையோ அலசல்கள், புதினங்கள், விவாதங்கள் நிகழ்கின்றனவே அவை ஏன் அச்சேறக் கூடாது? ஏறியும் எனக்குத் தெரியவில்லையா?


விகடன் வார இதழா? அதற்கு என்ன வரைவிலக்கணம்? ஏற்கனவே ஒருத்தர் சுட்டியது போல் பாதிப்பக்கங்கள் சினிமாவுக்கும், பேட்டிகளுக்கும். ஆண்மைக் குறைவு-சொட்டைத் தலை விளம்பரங்களையும் விலக்கிப் பார்த்தால் மிஞ்சுவது  என்ன?

ஆக மொத்தம் அப்படியே ஜனரஞ்சமாக இருக்க வேண்டும். வித்தியாசமானவைகள் மக்களுக்குத் தேவையில்லை.  அவர்களை அடையத் தேவையில்லை. வெறும் அஜால்,குஜால் மாற்றர்கள் மட்டுமே கொடுக்கிற காசுக்கு போதுமா? வித்தியாசம் என்று வாராவாரம் சினிமாப் போஸ்டர்களை மாற்றி மாற்றிப் போட்டால் சரியா? மக்கள் எப்போதும் போல வீணி வழிய வாசித்தால் போதுமா? எத்தனை பேருக்கு பதிவுகள் என்று ஒன்று இருக்கு, தமிழிலேயே எழுதலாம், வித்தியாசமான ஒரு சமுகப் புரட்சி அங்கே நிகழ்கின்றது,பக்கச் சார்பான செய்திகளை உடைத் தெறிய ஏற்கனவே களமமைத்து விட்டாகி விட்டது என்பது தெரியும்.

அல்லது திறமையானவர்களை கட்டிப் போடும் முயற்சியா? தங்களுடனேயே இருக்க.

எத்தனையே நிறைய ஆக்கங்கள் பலரால், பலவிதமாக படைக்கப் பட்டு மக்களை அடைய வேண்டியவைகள் எல்லாம் வெறுமனே கணினிகளில் மட்டுமே பிரசுரமாவது வருத்தமாக இல்லையா?

உதாரணத்துக்கு பொருளியல் தகவல்கள். யார், யார் எப்படி எழுதுவார்கள் என்று எனக்கே தெரியும். அவர்களின் கட்டுரைகள் நாணயத்தில் வந்திருக்கா? எனக்கு தெரியவில்லை. ஏன்? அங்கு எழுதுபவர்கள்  கும்மி அடிப்பார்களா? மோட்டார் விகடன்?

அப்புறம், நான் விகடன் அன் கோ படித்து ஆண்டுகளாகி விட்டது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்களின் கழிப்பறையை நாடும் போது கண்டிப்பாக ஒரு புத்தம் சொருகி இருக்கும். அது இந்த மாதிரியான  வார இதழ்கள் தான். ஒட்டு மொத்தமாக இவை படிக்க வேண்டிய இடம் அது தானா?


ஏதோ இதையாவது போடுறாங்களே என்று திருப்திப் படலாம் தான். ஆனால் தமிழின் நம்1 வார இதழ் என்று ஏன் போடுறாங்கள் என்பது மட்டும் புரியவில்லை. இந்த புரட்சிக்காரங்கள் நடாத்தும் நக்கீரன் போன்றவைகள் ஏன் பதிவர்களைக் கண்டு கொள்ளக் கூடாது? மீசை இல்லாதவங்கள கண்டுக்க மாட்டாங்களோ?


அப்பாடா தலைப்பிலேயே என்ர புத்தியைக் காட்டின சந்தோசம்.

1.விகடனைக் குறி வைத்துத் தாக்கும் பதிவர்கள். என்னை மாதிரி.

2.விகடனில் பிரசுரமாவதை குறியாகக் கொண்டோர்.

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் -விமர்சனம்(?)

Filed under: சமுகம் — pukalini @ 02:34

பழைய- பொது இடத்தில் தூக்குஜனார்த்தனன் பிள்ளையின் எண்ணங்கள். 117 தூக்குகள் போட்டவர். தமிழில் எழுதிக் கொடுத்துள்ளார். சசிவாரியர், மலையாளி ஆங்கிலத்தில் எழுதியதை இரா.முருகவேள் மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்.

1.தந்தை வழியாக வந்த உத்தியோகம். பிரியமில்லாவிட்டாலும்- தொழில், வயிற்றுப் பிழைப்புக்காக. பஞ்ச காலத்தில் பட்டினி கிடந்தாலும் வயிறு காயாமல் உயிரைக் காப்பாற்றும் அரச பணி. உயிர் எடுத்து உயிர் வளர்த்தல்.

2.சிறு வயதில் தந்தைக்கு ஊரில் இருந்த ஒரு வித பயம். இருந்தாலும் பெட்டிக் கடையில் காசு கொடுத்தால் தான் பொருட்கள். வித்தியாசமான அனுபவங்கள்.

3.எவனாவது கொலை செய்ய முடியவில்லையே என்று கலங்குவானா? இவரின் தந்தை வெற்றியளிக்காத ஒரு தூக்கிற்காக வருந்துகின்றார். தொழில் நேர்த்திக் குறைவு? அல்லது தூக்கின் பின் கொடுக்கப்படும் உபகாரச் சம்பளம் கிடைக்காமையா?

4.தொழிலை ஏற்றுக் கொண்ட பின்  முதல் தூக்கு. மனவருத்தங்கள். மனைவி சந்தோசப் படுத்த முயன்றும் தோல்வி.  ஆனால் காலையில்  கூடல். எப்படி ஒரு மனிதனால் சடுதியில் மாற முடிகின்றது?

5.தூக்கு உறுதியான பின் கடைசி  நிமிடம் வரை வாழ விட வேண்டும். அதனால்த் தான் காலையில் தூக்கு. அதாவது பழைய வழக்கப் படி சூரியன் உதிக்கும் வரை பழைய நாள்.

6. தூக்குப் போடும் நாளுக்கு முன் சிறை வளாகமே அமைதியாகும். ஏன்? ஏற்கனவே தெரிந்தது தானே? எதற்கு ஒரு நாள் மௌன விரதம்?

7.ஆனால், காக்கா குருவிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கும். சரி அவற்றைக் கொல்ல முன்  மனிதன் எப்பொழுதாவது யோசித்து இருப்பானா? பின் ஏன் அவை மனிதனுக்காக கவலைப் பட வேண்டும்.

8.தூக்கு மேடை ஆயிரம் தூக்குகளைப் பார்த்திருக்கும். ஆனால் எப்போதும் மேடை நோக்கியே கால் தடங்கள் இருக்கும், திரும்பி வந்த அடையாளங்கள் இல்லை.

9.தூக்குப் போடும் மரம் தூக்கிலிடுபவரைப் போல் ஒன்றரை மடங்கு கல்லின் மூலம் பரிசோதிக்கப் படும். மூன்று தடவைகள். ஆக மொத்தம் எத்தனை தடவைகள் மரம் பாரத்தைத் தாங்கி இருக்கும். சரி விடயம். மரத்தில் கயிறு கட்டப் படும் இடத்தில் உள்ள வடு இந்தச் சோதனைகளால் வந்ததா? இல்லை.

10.மனிதனை தூக்கிலிட்ட பின் கல்லுப் போல் அவன் அமைதியாக இருக்க  மாட்டான். உதறுவான். அதனால் ஏற்பட்ட தழும்பு தான் அது. பெண்கள் தூக்கிலிடப் பட்டதில்லை.

11.இது ஒரு கலை. எங்கே பழகுவது? ஒழுங்கான முறையில் தூக்கு போடப்படா விட்டால் உயிர் அந்தரத்தில் தத்தளிக்கும். அதிகமாக உதறும். ஒரு தடவை சலமும் மலமும் ஒருங்கே கழிந்தது.

12. எப்படி இருந்தது? வலித்ததா? என்று கேட்க முடியாது.

13. ஒழுங்காக மாட்டப் பட்ட தூக்கினால் கழுத்து முறிந்து உடனடி விடுதலை.

14. கிடங்கு வெட்டி உமியை கழுத்து வரை போட்டு நெருப்பு  மூட்டுதல். அருமையான  தமிழர்களின் கண்டு பிடிப்பு.

14.தூக்கு போடப்படுவதை பார்க்கலாம். பார்க்க வருபவர்கள் பெரிய புள்ளிகள், கௌரவமானவர்கள். ஏன் அவர்கள் மட்டுமே வருகிறார்கள்?

15. ஒரே ஒரு முறை என்னை ஏன் கொல்கிறீர்கள் என்ற கேள்வி.

16. பதில்? மேலிடத்து கட்டளை. அவர்களுக்கு.

17. சில வேளைகளில் தூக்கு நிறுத்தப் பட்டிருக்கும். ஆனால் ஆணை முடிந்த பின்னரே  அடையும் படி அமைக்கப் பட்டிருக்கும்.

18. 117 சோடிக் கைகள் கழுத்தை நெருக்குவது போல கனவுகள்.

இவைகள் எல்லாம் அவர் எழுதிய அனுபவக் குறிப்புகள்.

கோழியையோ, ஆட்டையோ வெட்டும் போது பார்த்தாலே சாப்பிட முடியாது. இவரால் எப்படி 117 துக்குக்களின் பின்னும் வாழ முடிந்திருக்கிறது. விரக்தியின் வெளிப்பாட்டைக்  காணலாம்.


இவரின் குறிப்புகள் அருமை. வித்தியாசமான உணர்வுகளுக்கு எம்மை அழைத்துச் செல்லும். ஆனால் வாரியார் சொதப்பி வைத்துள்ளார். படிக்கும் போதே எரிச்சல் வரும். அனுபவங்களை உணர முழுவதும் படிப்பது தான் ஒரு வழி.

குறிப்பு- இந்நூல் வெளிவர முன்னமே  தூக்கிலிட்டவர் இறந்து விட்டார். திடீர் சாவு தான். நல்ல சாவாம். இவர் படித்தது வெறும் 3ம் வகுப்பு மட்டுமே. இவரால் எப்படி இவ்வளவு தூரம் சிந்திக்க முடிந்தது என்பது வியப்புக்குரியது. ஏன்?

May1, 2009

நாய்களின் கொலைவெறி

Filed under: சமுகம் — pukalini @ 03:29

ஊரிலேயே நல்ல வசதியான, பணக்காரக் கூட்டம் அது. அவர்களின் சொகுசுக்கு எடுத்துக்காட்டாக ஒரு உயர் சாதி நாயையும் வளார்த்து வந்தனர். அது ஆளுயரத்தில்  பார்ப்பதற்கு  ஆள் மதிரியே இருக்கும். என்ன வித்தியாசம் என்றால் அதன் வால். எப்போதும் சுருண்டிருக்கும்.  வால்ச் சேட்டைகள் செய்யும் போது மட்டும் அது வாலை நிமிர்த்தி, நீட்டி வைத்திருக்கும். ஏதாவது குளறுபடிகள் செய்தால்  வாலைச் சுருட்டி பின்னங்கால்களுக்கிடையில் சொருகிக் கொள்ளும். சொல்ல மறந்திட்டன், அது ஒரு ஆண் நாய்.


குடும்பச் செல்வாக்கு கரணமாக அந்த நாய்க்கு போகுமிடமெல்லாம். சிறப்பு. பயம். வெளியிலே போனால் கண்டிப்பாக சொறி, சுரட்டை பண்ணாமல் வீட்டுக்க வராது. மிஞ்சிப் போனால் வாலாட்டி விட்டு, இரண்டு சத்தம் போட்டு விட்டு  வெற்றிக் களைப்புடன் வீடு திரும்பும். வளமாக யாராவது அகப்பட்டால் கட்டாயம் வாய் வைக்காமல் வீடு திரும்பாது. அப்படி வந்து விட்டாலும் அன்றைக்கு வீடு அல்லோல கல்லோல படும். வீட்டுக்காரள் வந்து அமைதிப் படுத்தும் வரை.

ஊராருக்கு நாயின் வேட்டைப் பொருளாக இருப்பதில் உடன்பாடில்லை. இருந்தாலும் என்ன செய்வது? வசதியான குடும்பம். நாய் வாய் வைக்குது என்று இவர்கள் வாய் வைத்தால் அப்புறம் இவர்களுக்கு வாய்க்கரிசி தான். அந்த வீட்டில் இன்னுமொரு நாயும் இருந்தது. அது அங்கிருந்த  உயர் சாதிப் பெண்  நாய் அந்த  நேரத்து வலி பொறுக்காமல், வீதியில் வரட்டி தின்று கொண்டிருந்த சொறி நாயுடன் பூட்டுப் போட்டு போட்ட குட்டி. வளர்ந்து வருகையிலேயே அது தன் பீக் குணத்தை காட்டியபடியால் போட்டுத் தள்ளி விட்டார்கள்.

இப்பொழுது உள்ள நாயும், அந்தப் பெண் நாய்க்குப் பிறந்த குட்டி தான் என்றாலும், அப்பா நாய் சாதியான நாயான படியால் விட்டு வைத்துக் கொண்டாடினார்கள். அவர்கள் வெளி நாடுகளுக்குப் போனாலும் அதையும் வேறு வெளி நாடுகளுக்கு  அழைத்துச் செல்லுவார்கள். போன இடத்தில் கக்கா போக வேண்டும் என்று அவிழ்த்து விட அது வரும் போது வேற ஒரு நாயுடன் வந்து சேர்ந்தது. அதுவும் கொஞ்சம் கலராக  இருந்த படியாலும் வாங்கக் கொஞ்சம் காசு தேவைப் படும் என்பதாலும் வீதி நாயாயிருந்தும்  பெண்  நாயாயிருந்த படியால் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.

நாய்க் குடும்பம் பல்கிப் பெருகியது. ஒரே குட்டிப்  பட்டாளங்கள். இருந்தாலும்  தாய் நாயும், அப்பா நாயும் இன்னமும் அப்படியே மாறாமல் இருந்தார்கள். அது தின்ற பழக்கம் விட்டுப் போகுமா?


இப்பொழுதும் ஊராரில் வாய் வைப்பதும், காலையில் உட்காரப் போனால் பின்னால் வந்து கடிப்பதும் இல்லாவிட்டால் பல்லுப் பதிப்பதுமாக இருந்தது. வெட்கம்,மான்ம், ரோசம், சூடு, சுரணை  கெட்ட மக்களும் திட்டி விட்டு போய் விடுகிறார்கள்.

இப்படித்தான் அது அதைத் தேடி அலைந்த போது அடுத்த  ஊருக்குப் போய் விட்டது.  பழக்க தோசம். வாய் வைத்து விட்டது. அடுத்த ஊர்க்காரர்கள் கொஞ்சம் வித்தியாசம். அந்த  நாயைத் தேடு தேடென்று தேடி நலமடித்து விட்டார்கள். நாயும் வீங்கின பையுடன் கால்களை அரக்கி, அரக்கி நடந்து திரிந்தது. பாவம் அதுக்கப்புறம் அதனால் பூட்டுப் போட முடியவில்லை.

பெண் நாயோ வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றது. பூட்டுப் போடவும் வழியில்லை. என்ன செய்யும். ஊர் நாய்களிடம் போகவும்  மனசு விடவில்லை. இது வேறு கிழடு தட்டி விட்டது. தெரு நாய்களுக்கு  கிழடுகளுடன் பூட்டுப் போட யாரு காசு கொடுக்கிறார்கள்?காமம்,தாபமாகி ,தாகமாகி கொலை வெறிக்கு தூபம் போடுகின்றது. குடும்பத்துடன் வெளியே சென்று அடுத்த ஊர்க்காராள் காலையில் ஒதுங்கும் போது பார்த்திருந்து பாய்கின்றன. பாவப் பட்ட பிறப்புகள் ஒதுங்க வழியில்லாமல் ஊரையே நாறடிக்கிறார்கள். பக்கத்து ஊர்க்கார்களும் பிரச்சினைக்கு காரணமான நாய்களை விட்டு அந்த மக்களை  வைகிறார்கள். எப்படியும் ஒரு  நாளைக்கு அந்த  நாய்களுக்கு ஒரு பாடம் கண்டிப்பாக இருக்குது.

April24, 2009

நான் கற்பில்லாதவனா?

Filed under: சமுகம் — pukalini @ 17:37

எனக்கு இப்பொழுது தான் எண்பத்தி சொச்சம் வயசாகுது.திருமணம் செய்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல். ஐந்து பிள்ளைகள் வேற பெத்திருக்கன். எல்லோரும் என்னைச் சாகிற வயசில போய் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிடன், நான் சோரம் போய் விட்டன், கற்பைப் பறி கொடுத்து விட்டன் என்று கண்டபடி வாய்க்கு வந்தவாறு சொல்லுகிறார்கள். திட்டுகிறார்கள்.  சிலர் கொடுஞ் சாபங்களைக் கூட கொடுக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ் நாளிலும், தாம்பத்திய காலத்திலும் நான் எப்படிக் கண்ணியமாக நடந்து இருக்கிறேன் என்பதையும், எனது மாசில்லாதா, ருசுப் படாத வாழ்க்கையையும்  சமர்ப்பிக்கின்றேன்.

அரை நூற்றண்டுகளுக்கு முன்னர்  எனக்கு கலியாணம் எனும் தளை போடப் பட்டது. மணப் பெண் எனது எதிர்பார்புகளுக்கு கிட்டவும் வரவில்லை. ஆயிரம் கனவுகள், கற்பனைகளுடன் வாழத் தொடங்கிய கணமே எனது ஆசைகள் நிராசைகளாகி விட்டன. பெண் கனாக் காணும் காலங்களில் வரும் பேச்சி அம்மா மாதிரியே இருந்தாள். இப்பொழுது சொல்லுங்கள்,நான் எனது வாழ்க்கையையே தியாகம் செய்யவில்லையா? அந்தக் கருவாச்சிக்கு என்னை, என் ஆகாசக் கோட்டைகளை இடித்து உரமாக்கி பசளை இடவில்லையா?

இன்னும் கேளுங்கள்,

எப்படி ஐந்து குழந்தைகள்? திருதராட்டினன் ஏன் குருடனாய்ப் பிறந்தான்? தாய்க்காரி கூட வந்த வியாசரின் உருவமும், வாடையும் பிடிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு, சிவனே என்று முகட்டிலே ஓடும் எலியை ஆரய்ச்சி செய்ததன் பலன். பாவமாம். குழந்தை குருடாயிற்று. நானும் மனுசன் தானே காலையிலேயே சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கமே கலியாணத்துக்கு அப்புறம் தான் வந்தது. எல்லாம் சனியன் பிடிச்ச, தறுதலையின் மூஞ்சியைப் பார்க்க விரும்பாததும், காலையிலேயே அதிலே விழிக்க வெறுத்ததும் தான் காரணம். இந்தத் தொல்லைகளில் இருந்து விடுபடவே நான் எவ்வளவோ நல்லவனாக நடித்து போராட்டங்கள்,கதைகள், கவிதைகள் என்று  வெளியிலே புறப்பட்டேன்.ஐந்து குழந்தைகளுக்கும் கூடியாக வேண்டிய கட்டாயம். நிர்ப்பந்தம். அதிலும் கூன், குருடு, ஊமை, நொண்டி இல்லாத ஐந்து குழந்தைகள். ஊர் தூற்றுமே? புழுதி வாரிக் கொட்டுமே? என் ஆண்மைக்கு இழுக்காகுமே? பொண்டாட்டிக்கு தீனி போடாத கஞ்சன் என்று அவச் சொல் தாங்க நேரிடுமே? என்ன செய்வேன்? ஐயகோ: ஒவ்வொரு முறையும் கூடிக் கலந்த பின் என்னிலே நான் வெறுப்புற்று,  என்னை அழிக்க எண்ணி ரயில் தண்டவாளத்திலே தலை வைத்துப் படுத்து போராட்டம் என்று கதை விட்டது எல்லாம் யாருக்காக?

இதுவரைக்கும் கட்டியவளுக்கு இது தெரியுமா? ஐந்து தரம் முந்தானையை விலக்கியதைத் தவிர அவள் எனக்கு என்னத்தைக் காட்டினாள்? சொர்க்கத்தின் வாசலைச் சுட்டி, திறந்து காட்டினால் சரியா? உள்ளே அழைத்துச் சென்று அறுசுவையும் படைக்க வேண்டாமா? அது அங்கே கிட்டுமா? கிடைக்குமா? முடியலையே.

அதனால் தானே நான் வெளிக் கடைகளில் கை நனைக்க வேண்டி  வந்தது. அதுவும் தள தள உடம்புகளுடனும், சுண்டச் சிவக்கும் பப்பாளிக் கலர்க்காரிகளுடனும் சல்லாபித்தது  தவறா? அவர்களின் குழந்தைகளுக்கு நான் அப்பனானேனா? ஏதோ கொஞ்ச நேரச் சபலத்துக்காகவும், கட்டியவளிடம் கிடைக்காததற்காகவும் தானே நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு அலைந்தேன். இதில் என்ன குற்றம் கண்டீர்? ஐந்து குழந்தைகளையும் சுகப் பிரசவம் பெற வைத்தேனே? வளார்த்தெடுத்தேனே? மேனா மினுக்கிகளிடம் இரண்டறக் கலந்த பின் தானே கருவாச்சிக்கும் சுகம் காட்டினேன். அவலை நினைத்து உரலை இடித்தாலும் உரலும் குழியாகும் தானே?


இதெல்லாம் தெரியாத பரதேசிப் பயலுகள், தங்களது பொண்டாட்டிகளையே கருவுறச் செய்ய இயலாதவர்கள், கையாலாகாதவர்கள், சோமாறிகள் எல்லோருமாகச் சேர்ந்து என்னைத் தூற்ற கூட்டு சேர்ந்து விட்டார்கள். என்னைத் திட்டும் நாக்குகள் துண்டாகட்டும். புழுதி அள்ளுபவர்களின் கைகளில் குஷ்டம் பரவட்டும். புறம்  பேசும் வாய்களில் புண்ணாக்கு விழட்டும்.

.

.

..

இதற்கும் இன்றைய கால கட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புனை கதையும் இல்லை.

இவர்கள் யட்டி போடுவதில்லை

Filed under: சமுகம் — pukalini @ 00:35

தமிழ் நாட்டில் கொஞ்சப் பேர் யட்டி போடுவதில்லை. அதுக்காக கோமணம் கட்டக் கூட பழைய வேட்டித் துணி இல்லை என்று அர்த்தம் இல்லை.  காரணம், ஏன் இதுகளை இடுப்பில் ஏற்றிப் பாரத்தைக் கூட்ட வேண்டும்.  அதுகளை வைத்து பாரத்தைக் குறைக்க வேண்டிய அவசியமே இல்லையே. அவர்களுக்குத் தான் இடுப்பிலே தொங்குவதற்கு என்று ஒன்றுமே இல்லையே? அப்புறம் எப்படி கலியாணம், குழந்தை, குட்டி என்று சுத்து மாத்து பண்ணூகிறார்கள்?

எல்லாம் சம தர்மம் தான். பெண்களுக்கான சம உரிமை. தங்களால் முடியா விட்டாலும் தங்களுடைய மனைவிமாரின் இன்பத்திற்கு எந்தக் குறையும் வைக்காதவர்கள். கட்டியவளின் சந்தோசமே முக்கியம் என்று பாடு பட்டவர்கள். ஆக மொத்தம் முதலெழுத்து மட்டும் இவர்களுடையது. பொருள் வேறொருவருடையது.

இது தப்பெண்ணம் என்றோ, தவறென்றோ யாராவது அறிக்கை விட்டால் இவை அனைத்தும் பின் வாங்கிக் கொள்ளப் படும்.

இதுக்கும் இந்தியா இலங்கைக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்று சொன்னால் உண்மை  தான் என்று நம்பும் படி அறிக்கை விட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

April4, 2009

விமானத்தில் கை பேசி

Filed under: சமுகம் — pukalini @ 18:57

FCC ஆனது விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது cellular transmitters
இயக்கத்தில் இருப்பதற்கு தடை செய்துள்ளது.ஆனால் விமானம் தரையில் இருக்கும் போது எந்த விதமான தடையும் இல்லை. இந்தத் தடையானது விமானத்தின் தொலைத்தொடர்புகளுக்கு இடையூறு செய்யும் என்பதற்காக ஏற்படுத்த்ப் பட்டதல்ல. மாறாக தரையில் உள்ள cellular
service களை இடையூறுகளில் இருந்து தவிர்ப்பதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளன. நமது கைப்பேசிகளினது உயரம் கூடும் போது அதனது rangeம் அதிகரிக்கின்றது. அதனுடன் coverage areaம் அதிகரிக்கின்றது.மிகவும் உயரமான இடத்தில் கைப்பேசி இருக்கும் போது அதனது தரைத் தொடர்புநிலையங்களுடனான முயற்சி பல cellular
base stationகளுடன் இணைப்பில் வருகின்றது. அதாவது ஒரே frequencyயில் இயங்கும் பல தொடர்பு நிலையங்களின் வாயிலாக அது பல base stationகளுடன் இணைப்பதற்கு முயல்கின்றது. .இதனால் பல blocked அல்லது dropped அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கின்றது.

விளக்கமாகப் பார்த்தால், நமது கையில் இருக்கும் கைப்பேசி ஆனது ஒவ்வொரு செக்கனுக்கும் பல நூறு தடவைகள் செல் போன் ரவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தனது இருப்பிடத்தையும், எவ்வளவு தூரத்தில் தான் இருக்கின்றது என்பதனையும் தெரியப் படுத்துகின்றது. இந்த ரவர்கள் கைப்பேசியினது பேஸ் ஸ்ரேசனுடனான இணைப்பை உறுதி படுத்துகின்றது. 

சில வேளைகளில் கைப்பேசி பல ரவர்களின் ரேஞ்சில் வரும். அப்பொழுது அது எந்த ரவரிலிருந்து கூடுதலான சக்தியினை பெறுகின்றதோ அந்த ரவரின் ஊடாக பேஸ் ஸ்ரேசனுடன் தொடர்பில் வரும். இதற்கு ஒவ்வொரு கைப்பேசியும் ரவரும் தனித் தனி அதிர்வெண்களை உபயோகப் படுத்தும். குறிப்பாக அறுகோண வடிவில் ரவரினது ரேஞ்ச் அமைந்திருக்கும். இடையூறுகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ரவரும் வித்தியாசமான அதிர்வெண்களை உபயோகிக்கும்.

ஆனாலும் இந்த அதிர்வெண்கள் ஆறு அறுகோண அமைப்புகளுக்கு அப்பால் மீண்டும் உபயோகத்தில் வரும்.

சரி, 
இனி நாம் விமானத்தில் இருக்கும் போது எமது கைப்பேசி ஆனது பல ரவர்களின் ரேஞ்சில் வரும். அதிலும் குறிப்பாக ஒரே அதிர்வெண்ணில் தொழிற்படும் ஏராளமான ரவர்களுடன் அது தொடர்பு கொண்டு பேஸ் ஸ்ரேசன்களுடன் இணைப்பு பெற முயலும். அப்பொழுது, அதே அதிர்வெண்ணில் நிலத்தில் இருந்து தொடர்பு கொள்ள முயலும் கைப்பேசிகளின் இணைப்புகளைத் துண்டிக்க முயலும்.
எப்படி? நமது கைப்பேசியும் முயல, கீழே உள்ளதும் முயலும். செக்கனுக்கு ஆயிரம் தடவைகள் படி இரண்டும் முயன்றால் ரவர் என்ன செய்யும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பும். இப்படி பல ரவர்களின் வழி பல பேஸ் ஸ்ரேசன்களை இணைக்க முயன்றால் எப்படி இருக்கும். இது ஒரு கைப்பேசிக்கு. இப்படி ஆயிரமாயிரம் கைப்பேசிகள் ஆயிரக்கணக்கான ரவர்களையும், நூற்றுக் கணக்கான பேஸ் ஸ்ரேசன்களையும் குழப்பினால் என்னதான் நடக்கும். 

அதனாலயே அதை தடை செய்துள்ளார்கள்.
ஆனாலும் அனுமதி பெற்று விமானத்தில் உபயோகிக்க என்று சில அதிர்வெண் வகைகள் உள்ளன. தாராளமாய் உபயோகிக்கலாம். பணம் தான் அதிகம்.

Next Page »

Blog at WordPress.com.