புகழினி

January4, 2010

பீக் கதைகள்(சிறுகதைகள்)- பெருமாள் முருகன்.

Filed under: கதை — pukalini @ 00:52

கடந்த இரு தடவைகள் நூலகத்துக்கு சென்ற போதும் இப்புத்தகம்  கண்ணில் பட்டது. இருந்தாலும்  எடுத்துச் சென்று படிப்பதற்கு எந்த ஓர் உந்துதலும் ஏற்படவில்லை. இந்த வாரமும் எற்றுப் படவே இரவல் வாங்கிச் சென்றேன். வாசிக்க ஆரம்பித்ததும் தொடர்ந்து வாசித்து முடித்தேன்,புத்தகத்தின் தலைப்பு என்னவோ ஒரு மாதிரி இருந்தாலும் உள்ளடக்கம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஒவ்வொரு சிறுகதையும் என்னை மறுபடியும் என்னைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. கண்டிப்பாக ஒவ்வொருத்தரையும் சிந்திக்க வைக்கும்.

எமது குறைபாடே வெளி நடிப்பு. அதிலும் இவ்வாறானதொரு புத்தகத்தை எடுக்கவே அசிங்கப் படுவது. எதுக்கு சும்மா வெளிப்பகடைகள்?

சந்தன சோப்பு. என்னை சேலம் பஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. அதில் நான் என்ன மாதிரி நடந்து கொண்டேன் என்று கூனிக் குறுக வைத்தது.  கருப்பனார் கிணறு சிரிக்கவும், நோகவும் செய்தது. மஞ்சள் படிவு, கருதாம்பாளை ஒவ்வொன்றும் எனது இனிய குழந்தைப் பருவத்துக்கு இட்டுச் சென்றது. அதிலும் கடைசி இருக்கை என்னையே எனக்கு ஞாபகப் படுத்தியது.

பெருமாள் முருகன் அசத்தி இருக்கின்றார். முடிந்தால் இந்தப் புத்தகத்தை படியுங்கள். இது  நூல் விமர்சனம் இல்லை. படியுங்கள் என்று சொல்கிறேன்.

Advertisements

November27, 2009

புகைப்பவர்களா பொண்டாட்டி இப்படி சொன்னாளா?

Filed under: கதை — pukalini @ 04:45

எனக்கு கொஞ்ச நாட்களாக இல்லை,பல நாட்களாக இந்தப் பழக்கம் இருக்கு. பழைய காதல் மரிச்சுப் போனதில தொடங்கியது. இப்ப வந்த காதலியும் மனைவியுமானவா பல தடவை பல மாதிரியும் சொல்லிப் பார்த்தா. சொல்-வழி கேக்கிற மாதிரித் தெரியல.கடைசியா ஒரு அஸ்த்திரத்த எடுத்து விட்டா. எப்படி?

“நீங்க இதை விடாட்டி நான் குழந்தை பெத்துக்க மாட்டன்”
“ஏன்”
“குடிச்சிட்டு நீங்க சீக்கிரமா மண்டைய போட்டுருவீங்க. அப்புறம் நான் வளர்த்து, ஆளாக்கணும் என்று எனக்கு என்ன தண்டமா”
“……”
“புள்ளையும் தனிய அப்பனில்லாம வளர்ந்து கஷ்டப் படணுமா”
“சரிப்பா”
“அப்புறமா புள்ளையோட இருந்தா இன்னொரு கலியாணம் செய்யிறதும் கஷ்டம்”
.
.
இப்பிடிப் போட்டுத் தாக்கின பிறகும் என்ன செய்ய முடியும்?
“சரிப்பா இனிமே நான் தம் அடிக்கேல”

இதில அவவுக்கு ஆகவும் கோபம் வரக் காரணம், இப்பவும் நான் பழைய சோகத்தில தான் புகை விடுறன் எண்டு.

இருந்தாலும் களவா இப்பவும் புகை விடுவதுண்டு.
நீங்கள்?

August4, 2009

மகளுக்கு இந்தியா வேண்டாம்.

Filed under: கதை — pukalini @ 05:01

நேற்று ஒரு மாதிரி நினைத்ததை ஒப்பேற்றியாகிவிட்டேன். அதுவும் இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுவதே மிக்கக் கடினம். அதிலும் நாம் நினைத்ததை அவர்கள் சம்மதிக்குமாறு பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் எடுத்துச் சொல்லுவதென்றால் சும்மாவா? என் மகள் ரொம்பவே பிடிவாதக்காரி. என்னுடைய வளர்ப்பு விதம் அப்படி.

நான் மட்டும் இலேசுப் பட்டவனா? நாடறிந்த இலக்கியவாதி.சமுதாய அக்கறை கொண்ட சீர்திருத்தவாதி. எழுதியது என்னவோ பத்துக் கதைகள் தான். அத்தனையும் புரட்சியை தட்டி எழுப்பி இருக்கின்றனவே. முந்நாளில் சினிமாப் பகுதியில் கிசுகிசு எழுதியதும் கை கொடுத்தது. அங்கு தானே கற்பனை கடலெடுத்து ஓடும். எந்த நடிகர் கக்கா போனார், எந்த நடிகை குசு விட்டாள் என்று குழப்பிக், குழப்பி தம் பிடித்து எழுதியே  காலத்தை ஓட்டியவன். என்னிடமா? அதிலும் எந்தப் பள்ளி விழாவானாலும், கல்லூரிக் கலை நிகழ்ச்சியானாலும் காசு வாங்காமல்ப் போய் விளம்பரம் பார்த்தவனாச்சே.

என்ன செய்வது காசுக்கு ஆசைப் பட்டுஅந்தரத்தில் ஒருத்தியைக் கைப்பிடித்தேன். அவளும் ஒரு பிள்ளையை பெற்ற பின் தலை மறைவாகிவிட்டாள்.  வேறு என்ன தான் செய்வாள்? குடியும், கும்மாளமுமாய் இருந்தால் பரவாயில்லை. கூத்தியாளையும் சேர்த்துக் கொண்டது தான் வினையாகி விட்டது. பெற்ற பிள்ளையையும் மறந்து போய் விட்டாள்.

அதை என்ன செய்வது என்று கடனுக்கு வளர்க்கத் தொடங்கி இன்று வினையாகி நிற்கின்றது.  மறுமணம் வேண்டாமென்று நல்லவனுக்கு நடித்து கரை கண்டாலும் என் நற்பெயரைக் காப்பாற்ற மகளை செப்பம் செய்ய வேண்டிற்று. அவளோ எனக்கு மேல். படிப்பும் கட்டை. எப்படியோ அடித்துப் பிடித்து காசைக் கொட்டிக் கரியாக்கி டாக்டராக்கியாச்சு. இனியும் அவளை என் கூட வைத்திருக்க முடியுமா? கலியாணம் செய்து வைக்க வேண்டும்.அதுவும் ஒரு நாமம் போட்டவன் வேண்டுமே?

என்னிடம் கைவசம் நல்ல மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள். எல்லோரும் எனது வாசகர்கள். எனது சிந்தனையில் கவரப் பட்டவர்கள். எவனாவது ஒருத்தனை கை காட்டிக் கட்டச் சொல்ல வேண்டியது தான். அதிலும் வெளிநாட்டு மாப்பிள்ளைதான் நல்லது. எனது கடைசிக் காலத்தில் எங்காவது ஒரு நாட்டில் காலை நீட்டி நிமிர்த்தி உட்கார்ந்து வெளிநாட்டுக் கதை எழுதலாம்.

அதுக்கு என் மகள் சரிப்பட வேண்டுமே? படித்திருக்கிறாளாம். டாக்டராம். ஊரில வேலை செய்ய வேண்டுமாம். அவளின் வண்டவாளம், தண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும் தானே. அவள் எல்லாவற்றிலும் என்னை மிஞ்சியவள். 16 வயதிலேயே ஓடிப் போயிட்டு சலிச்சுப் போய் திரும்பி வந்தவள். நான் ஏதோ பிரபலம் எனபதாலும் கையில் கொஞ்சம் காசு இருந்ததாலும் கண்டவனிடமும் காலில் விழுந்து தான் அவளுக்கு மருத்துவக் கல்லூரி அனுமதி வாங்கிக் கொடுத்தேன். இப்பொழுது  டாக்டராம். சும்மா சொல்லக் கூடாது என் மகளுக்கு நல்லாவே நடிக்க வருது. வேறு என்னவாம் இந்தியா தானே இழிச்ச வாயன்கள் நிறைய இருக்கும் இடம். மருந்தை தப்பாக் கொடுத்து எவனாவது செத்துத் தொலைந்தாலும் கேள்வி இல்லை. வெளிநாடுகளில் சும்மா விட்டிருவாங்களா? நான் வெளிநாடு என்று சொல்லுவது அமெரிக்காவைத் தான்.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் என்ன உத்தம சீலர்களா? நாட்டுக்கு வரும் போது மட்டும் தெளிவாகுவது. விட்டால் முக்காடு போட்டுக் கொண்டு ஒதுங்குவது. படிக்கும் வரைக்கும் இந்தியா வேண்டும். முடிச்சப் பிறகு குப்பை, தூசி. மூத்திர வாசம். பிச்சைக் காரர்கள். என்ன செய்வது?அவர்களாவது சொர்க்கத்தை அனுபவிக்கட்டுமே. அப்புறம் ஆறு இலக்கத்தில் சம்பளம் போட்டு வலை வீசி பெண்டு பிடிக்கிறது. கூட்டிக் கொண்டுபோய் அங்கு வைத்திருக்கிறவளுக்கு துடைக்கச் சொல்லுறது. இல்லாவிட்டால் மாமா வேலை பார்க்கிறது.

ஒரு மாதிரி மகளை சம்மதிக்கச் செய்தாகி விட்டது. அவளும் அமெரிக்கா போய்விடுவாள். எனக்கும் கடைசிக் காலம் அமெரிக்காவில்.  எழுத்தாளனாக இருந்து சேர்த்த காசு அமெரிக்கா போக உதவுது. தமிழ் நாட்டு மண்ணாங் கட்டிகளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது. அடுத்த முற்போக்கு, பிற்போக்கு அல்லது ஒரு புறம்போக்கோ வயிற்றுப் போக்கு இலக்கியவாதி வருவான். இதுகளும் பல்லைக் காட்டுங்கள். விடுங்கள். அது சரி நான் என்ன எழுதுறன் என்று என்  மகளுக்குத் தெரியுமா? என்ன கேள்வி அவளுக்கு தமிழே தெரியாதே?

அம்மாடி ஒரு வழி பண்ணி மகளை அனுப்பியாச்சு. இனியாவது ஒரு நாளைக்கு ஒரு விசிறியா வீட்டிலேயே வீச வேண்டியது தான். எத்தனை நாளைக்குத் தான் கதை எழுதுறன்,கதை எழுதுறன் என்று ஊட்டி, ஏற்காடு போகிறது. கட்டிய வீட்டிலேயே கலகம் பண்ணலாம். இப்பவாவது புரிந்திருக்குமே மகளுக்கு ஏன் இந்தியா வேண்டாமென்று.

August2, 2009

லண்டனுக்கு வாங்கோ……

Filed under: கதை — pukalini @ 21:23

லண்டனுக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகி இருக்கிறது. அதற்குள்ளாகவே வாழ்க்கை இப்படி நாறடித்து விட்டது. எனக்கென்ன வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் வயசா? இந்த ஆவணியில் 25 ஆகுது. இந்த வயதுக்குள்ளேயே அடுத்த கட்டம் என்ன என்று தெரியாமல் தடுமாறத் தொடங்கி விட்டது.

வீட்டில் மூத்த பெண் பிள்ளை. அதனால் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே வளர்த்து விட்டார்கள். பின்னால் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாம்.எனக்கு இப்பொழுது கை காட்ட யாருமில்லை. கொஞ்சம் அழகாக இருந்து தொலைந்து விட்டேனா, ஆக்கினையின் ஆரம்பம். அழகென்றால் அப்பிடி இப்பிடி நயன்தாரா அளவில் இல்லை. சும்மா மா நிறம் தான். நம் மக்களுக்கு நிறத்தில தான் அழகு இருக்கென்று ஒரு நினைப்பு. கேவலம் மைக்கேல் ஜாக்சனே கறுப்பு பிடிக்காமல் அடாவடி பண்ணி இருக்கும் போது, வெள்ளை தான் சொர்க்கத்தின் நிறம் என்று நினைத்திருக்கும் கேடு கெட்ட தமிழ் மகா சனங்களுக்கு என்ன இழவு புரிந்திருக்கப் போகுது.

பள்ளிக்குப் போனாலும் கரைச்சல். கல்லூரிக்குப் போனாலும் இடைஞ்சல். எல்லாம் என் நிறம் பண்ணிய பாடு. ஆடு, மாடுகளுக்கு இந்த நிறம் தெரியவில்லையே? பாழாய்ப் போன மனிதர்களுக்குத் தான் இந்த நிறக்குருடா? அதிலும் வேசிகளின் கூடாரமாகி விட்ட தமிழ் நெஞ்சங்களுக்கு வேறு என்ன தான் புரியும். பரவை முனியம்மா போட்டுக் குளிக்கும் சவர்க்காரத்துக்கு இந்திக்காரி விளம்பரம். பச்சை மண்ணைக் காட்டக் கூட ஒரு வெள்ளைத் தோல் தேவை. பார்த்துப் பார்த்து வளர்ந்த சனங்களுக்கு மண்டைக்குள் என்ன ஊறி இருக்கும்?

ஆனாலும் எனக்கு எடுப்பும், கொழுப்பும் கொஞ்சம் கூடத்தான். பின்னே, நாய்க் கூட்டம் எதுக்கு அலையுதோ அது என்னிடம் இருக்குதே? போதாதற்கு இளமை வனப்பும், வாலிப மிடுக்கும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா? சில, பல பன்னிக் கூட்டங்கள் முன்னுக்கும், பின்னுக்கும் பகடை உருட்டிக் கொண்டு திரிந்தாலும் நான் என்ன தருமனா ஏமாற? எனக்கு என் பெறுமதி தெரிந்திருந்தது. சும்மா வீணாய்ப் போகலாமா? மிஞ்சிப் போனால் டேய் இந்த பிகருடன் சாப்பிட்டனடா என்று சொல்லும் ஆணழகர்கள் இருந்த வரைக்கும் கல்லூரியில் தண்டச் செலவு வைத்ததில்லை.

ஐந்து வருடங்கள் முதுகலை படித்து முடிக்கும் வரைக்கும் நடந்தேறிய நாட்குறிப்புகளை எடுத்து விட்டால் நாட்டு நடப்பு நாறி விடும். என் பிள்ளை தங்கக் கம்பி, செப்புக் கோல் என்று பீற்றித் திரியும் அம்மாமார்கள் எல்லோரும் வாய்களை பினாயில் போட்டு தேய்க்க வேண்டும். ஆண் சிங்கங்கள் எல்லோரும் காதல் மன்னர்கள் இல்லையோ, மன்மதக் குஞ்சுகள் என்று நினைப்பு.

எனக்கு வெளி நாடு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு. அதுவும் லண்டனுக்கு. அமெரிக்காவில் தான் நம்ம ஊர் பன்னாடைகள் பன்னி மேய்க்குதுகளே? அதுக்கு என்ன வழி? என்னிடம் உள்ளது என்ன? பொறுத்தார் பூமி ஆழ்வார். மாப்பிள்ளை தேடும் போது சொல்லியாச்சு. எனக்கு லண்டன் மாப்பிள்ளை தான். இருந்தாலும் கொஞ்சம் சங்கடப் பட்டுத் தான் போனேன். இரண்டு வருடங்களாயிற்று ஒரு இழிச்ச வாயன் மாட்டுவதற்கு.

லண்டன் மாப்பிள்ளை அல்லவா. லண்டனிலேயே பெரிய கடை இருக்காம். வைத்திருக்கும் கார் மட்டும் ஒரு கோடியாம். பங்களா தான் வீடாம். என்ன அவரு படிச்சது வெறும் பத்தாம். அதுக்கென்ன இவ்வளவு தொழில் பண்ணுறவருக்கு படிப்பு என்னத்துக்கு? ஒரு மாதிரி அடம் பிடித்து அடிச்சு பிடிச்சு கலியாணம் பண்ணி லண்டனுக்கும் வந்தாச்சு.

அப்பாடி இவரு சுத்த மோசம், நான் வந்தது லண்டன் பார்க்க. ஒரு கோடியில கார் இருந்தாலும் வெளியே போனாத் தானே அது கார். இவருக்கு தொழில் முக்கியம். வயசு அப்படி. பத்து வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தது ரொம்பத் தப்போ? லண்டன் மாப்பிள்ளை என்று தொப்பையையும், சொட்டையையும் அசட்டை செய்தது தப்போ? இளம் மனைவி, அதுவும் இருபத்தைந்து வயதில் காய்ந்து கிடக்கின்றது அந்த அரைக் கிழத்துக்கு புரியாதோ?

அப்பவே சொன்னார்கள். காசுக்காரன். 35 வயது. லண்டனில இருக்கிறான். எல்லாம் ஆடி முடிச்சிட்டு ஒரு பிள்ளை பெறும் மிசினை வாங்கிக் கொண்டு போகப் போறானென்று. அது தான் நடக்குதோ? நடக்கப் போகுதோ? ஒரு சினிமா, கடை தெரு என்று எங்காவது போக முடிகின்றதா? ஏன் வெளியே காற்று வாங்கத் தான் போய் வர இயலுதா? மரக் கட்டை. ஜடம். இதுகள் எல்லாம் எதுக்கு கலியாணம் கண்ணறாவிகளைப் பண்ணித் தொலைக்குதுங்கள்?

இங்க வெள்ளைத் தோலுக்கு மதிப்பும் இல்லை. ஏதோ பிச்சைக்காரி மாதிரி பார்வை. புருசனும் வீண். எனக்காக உயிரையும் தருவேன். சொர்க்கத்தையும் உள்ளங் கையில் ஏந்துவேன். மகாராணிக்கு இதயத்தினை கிழித்து அபிசேகம் செய்வேன் என்று புலம்பித் திரிந்தவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக கனவில் வருகிறார்கள்.

July18, 2009

நான்-ஒரு கொலையின் சாட்சி.

Filed under: கதை — pukalini @ 18:27

தீபாவளிக் கூட்டம். எங்கும் கச கச என்று ஒரே மக்கள் திரள். அங்கு, இங்கு அசையவே முடியவில்லை.இன்னும் அரை மணி நேரம் தாமதமாகத் தான் நாகர்கோவில் போகும் பயணிகள் புகைவண்டி வந்து சேரும். அதற்கிடையில் இங்கு இருந்தால் மூச்சுத் திணறிச் செத்து விடுவார்கள். இந்த சமுத்திரத்துக்குள் முத்துக் குளிப்பது போலத் தான் உள்ளே ஏறுவதும், ஆக மிஞ்சிப் போனால் ஒற்றைக் காலில் நிற்பதும்.

நினைத்த மாதிரியே மேலும் அரை மணி நேரம் தாமதமாக வண்டி ஆடி அசைந்து வந்தது. வரும் போதே தெரிந்தது மக்கள் தொங்கிக் கொண்டு வருவது. ஏற்கனவே தாமதம். பணம் கட்டி சீட்டுக்களையும் வாங்கியாகி விட்டது. இந்த நெரிசலுக்குள் அடம்பிடித்து ஏறி எங்களது பிரயாணத்தை உறுதிப் படுத்தாவிட்டால் அப்புறம் என்ன வாலிப முறுக்கு. நானோ எமன் மாதிரி கையில் பையுடன் நிற்கிறேன். என்னுடன் கூட வந்த நண்பனோ எமகாதன் மாதிரி என்னிலும் இருமடங்கு அளவில் வண்டியையே இழுத்து நிறுத்துவது போல் நிற்கிறான்.

ஒரு மாதிரி அடம்பிடித்து உள்ளே கால் வைத்து ஏறியாகி விட்டது. கையில் உள்ள பையையே கீழே வைக்க இடமில்லை. நிற்பதற்குக் கூட இடமில்லை.  வாசனை அடித்து நொருக்கும் கழிப்பறைக்கு முன் ஒற்றைக் காலில் நிற்பதற்குத் தான் இடம் கிடைத்தது. பலத்த சத்தம். அனேகமானோர் திருப்பூரில் இருந்து ஊருக்குப் போபவர்கள். கழிப்பறை செல்லும் வழி முழுவதையும் அடைத்து நானும் எனது நண்பனும் நின்றவாறே பயணத்தைத் தொடங்கினோம்.

உள்ளே கண்ணுக்கு எட்டும் தொலைவில் இரண்டு இளம் பெண்கள், பொருட்கள் வைக்கும் பலகையில் பொருட்களுக்கு மேல் நன்றாக காலை விரித்துப் போட்டுக் கொண்டு இருந்தார்கள். கீழே கவனிக்கத் தக்கவாறு ஒரு பழங்கிழம். நெற்றி முழுவதும் திருநீற்றுப் பட்டை. அவருக்கு முன்னால் வாளிப்பான ஒரு பெண். சிறுமிக்கு அதிகம். பெண்ணுக்கு குறைவு.
எங்களது பக்கம் ஒரு வாயில் படியில் இரு சிறுவர்கள். ஒருத்தனுக்கு வயது 15 இருக்கும். அடுத்தவனுக்கு 13 வரும். அண்ணன் தம்பியாம். இன்னும் பலர். முக்கியமாக ஒருத்தன். வயது நாற்பதுக்கு பக்கம் இருக்கும். நெடு நெடு என்று வளர்ந்திருந்தான். தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இடம் பக்கம் வகிர்ந்து சீவி விட்டிருந்தான். வாயிலிருந்து பீடி நாத்தம் கப கப என்று வந்து கொண்டிருந்தது.

வண்டி அசைய ஆரம்பித்தது. என் நண்பன் முன்னால் காலை விரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வலை வீசிக் கொண்டிருந்தான். போட்டியாக அந்த முக்கியமானவன். எனக்கு வாய்த்தது கழிப்பறை வாசம் தான். எப்படியும் நண்பன் அந்த இரண்டுக்கும் அருகில்  போய் விடுவான். நான் நிற்பதற்காவது கொஞ்ச இடம் கிடைக்கும்.

பக்கத்திலிருந்த இரண்டு சிறுவர்களும் கலாட்டா பண்ண ஆரம்பித்தார்கள். வண்டியில் நான் இருந்த பெட்டி முழுவது ஒரே கசமுசா. திருப்பூரிலிருந்தே இப்படித் தான் ஆட்டம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் வயதுக்கு அதிகம் தான். பெரியவன் படியில் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்தான். வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், வசனங்களும் காது கொடுத்து  கேட்கிற மாதிரி இல்லை. இந்த வயதுக்குள் இப்படியா? திருப்பூரின் வளர்ச்சியோ?எல்லோரும் அவனுக்கு புத்திமதி சொல்ல கிளம்பினார்கள்.ம்ம்ம். ஒரு அசுமாத்தத்தினையும் காணோம்.

கையில் பீடியை எடுத்து பற்றினான். எல்லோர் மூஞ்சியிலும் புகை விட்டான். தம்பிக்காரன் அது மட்டும் பண்ணவில்லை.எல்லோர் திட்டும் சேர்ந்து கொண்டது. போதாதற்கு படிக் கம்பியினைப் பிடித்துத் தொங்கி பெட்டிக்குள் இருந்த இளம் பெண்ணின் மீதும் எட்டி, எட்டி புகை அடித்தான். கிழம் கிளம்பியது. நெற்றியைச் சுருக்கி திருநீறு முகத்தின் மீது விழ திட்டியது. அந்தச் சின்னப் பெண் அவரின் மகளோ, பேத்தியோ? பொடியா உள்ள வா. என்ன தான் அநியாயம் செய்தாலும் பரவாயில்லை. கம்பியில் தொங்காத. என் வயதுக்காவது மரியாதை தா. நான் எத்தனையோ விபத்துக்களை பார்த்திருக்கேன். கம்பியைப் பிடித்து ஆடாத. கவனம்.

தேறவில்லை. ஆகவும் அட்டகாசம் தாங்கவில்லை. நண்பனும் நல்லவனுக்கு நடித்து பொருட்கள் வைக்கும் பலகையில் இடம் பிடித்துக் கொண்டான். முன்னுக்கு நின்ற முக்கியமானவனும் அந்த இருவருக்கும் பாடம் புகட்டப் போறதாகச் சொல்லிக் கொண்டு வாயில்ப் படிக்குள் போய் விட்டான். நானும் மெதுவாக நகர்ந்து பெட்டிக்குள் புகுந்து கொண்டேன்.கொடுமுடி கடந்த பின் திடீரென்று ஒரு நிசப்தம். வண்டிச் சத்தம் மட்டும் கேட்டது. மெது மெதுவாக தகவல் கசிந்தது.அந்த அட்டகாசப் பெரியவன் ஓடுகின்ற வண்டியில் இருந்தே கீழே விழுந்திட்டானாம். ஒருத்தரும் ஒன்றும் பேசாமல் இருந்தனர். யார்மே கவலைப் படவில்லை.கிழம் மட்டும் இப்படித்தான் அங்கேயும் நடந்தது என்று பழங்கதை கூறிக் கொண்டு வந்தது.

எனக்கு என்ன் நடந்ததென்று புரிந்து விட்டது. நடந்தது மிகவும் நல்லது. அவன் இப்பவே இப்படி என்றால் பின்னாளில்? நான் ஒன்று செய்ய நினைத்தேன். அது யார் மூலமாகவோ நடந்து விட்டது. ஆக மொத்தம் காரியம் நல்லது. நடத்தியவன் நல்லவனா? கெட்டவனா? அது நமக்கு முக்கியம் இல்லையே? வண்டி ஓடும் வேகத்துக்கு தப்புவது கடினம். அதுவும் சில்லுக்குள் அகப்பட்டால் சவப் பெட்டிச் செலவும் மிச்சம்.

வண்டி மதுரைக்குள் ஆடி அசைந்து நுழைந்தது. ஒரு கொலையின் தடங்களை மறைத்துக் கொண்டு கீச்சிட்டுக் கொண்டு நின்றது. மக்களும் அடித்துப் பிடித்து உள்ளே ஏறினார்கள். நானும் நண்பனும் இறங்கி நடந்தோம். அந்த முக்கியமானவனும் முன்னுக்குப் போய்க் கொண்டிருந்தான். டேய், அவன் தானா விழவில்லையடா. இவன் தான் தள்ளி விட்டிட்டான். நண்பனுக்கு வியர்த்தது. எப்படித் தெரியும்? எனக்கு நிச்சயமாத் தெரியும். இப்ப இன்ன செய்யலாம். விட்டுத் தொலை. நமக்கேன் வீண் வம்பு. சனியன் தொலைந்தது.

கவனமாக அவனுக்குப் பின்னாலேயே போனோம். முன்னுக்குப் போன பெண் அவனைப் பார்த்துச் சிரித்தாள். நெருங்கிப் பார்த்ததில் அவன் அவளை உரசுவது அப்பட்டமாகத் தெரிந்தது. நண்பன் என்னை உற்றுப் பார்த்தான். நான் அவனை நெருங்கினேன்.

July11, 2009

என்னைக் காதலித்தவனுக்கு ஒரு மடல்,

Filed under: கதை — pukalini @ 19:35

என்றும் என்  இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அருமை நண்பா,

இன்று உனக்கு மண நாள். பலதும் பெற்று நல்வாழ்வு  வாழ எனது வாழ்த்துகள். இருந்த போதிலும் உனது திருமண விழாவிற்கு வர இயலவில்லை. அழையா விருந்தாளியாக வருவதற்கும் எனது மனம் இடங் கொடுக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக நமது  நட்பு  நன்றாகத் தானே இருந்தது. ஆண்-பெண் நட்பு எப்படியும் ஒரு ஒரு நாளைக்கு கேள்விக் குறியாகும் என்று எல்லோரும் சொல்லும் போது நான் மட்டும் அதை நம்பவில்லை. நமது நட்பு ஆழமானது. எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று நினைத்திருந்தேன்.

உன்னை எப்பொழுதுமே நண்பன் என்ற தரத்திற்கு மேல் என்னால் உயர்த்த முடியவில்லை. நீ முஸ்லிமாக இருந்த போதும் எனக்காக கோயிலுக்கு வந்த போது பெருமைப் பட்டேன். பரீட்சை சமயங்களில்  எனது எழுத்து வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் போது சந்தோசமடைந்தேன்.

எப்பொழுதுமே உன்னை உயர்ந்தவனாகவே காட்டிக்  கொண்டாய். நானும் ஏமாந்தேன். என்னில் அக்கறை உள்ளவனாக இருந்தாய். நானும் நம்பினேன். அந்த அக்கறை ஏன் என்று புரிந்த போது அருவருப்பாக இருந்தது.

உன்னை ஒருத்தி காதலிக்கும் போது வேண்டாம் என்று ஒதுக்கினாய். எனக்காக என்றாய். ஏனென்றால் நமது நட்பை சந்தேகிப்பதாகச் சொன்னாய். எனக்கு பெருமை பிடிபடவில்லை. இப்படி ஒரு நண்பனா என்று.

எப்பொழுதும் நீ ஒரே கண்ணோட்டத்தில் தான் என்னிடம் பழகி வந்திருக்கிறாய். அந்தச் சனியனையாவது முதலில் சொல்லித் தொலைத்திருக்கலாம் தானே? எதற்கு மூடி மறைத்தாய்? பயமா? நம்பிக்கை இன்மையா?

நான் இன்னுமொருவனைக் காதலிப்பதாகச் சொன்னதும் ஏன் துள்ளிக் குதித்தாய்?  உனக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்று அடம் பிடித்தாய். எனது உணர்வுகள் உனக்கு புடலங்காயாய்ப் போய்விட்டனவா? அன்றிலிருந்து உனது கணக்கு தீர்க்கப்பட்டு விட்டது தானே?

அதற்குப் பிறகும் நீ சும்மாவா இருந்தாய் எனது காதலைப் பற்றி இல்லாத பொல்லாப்புகளை சொல்லிக் கொண்டு திரிந்தாய். ஆண்டவனுக்கு நன்றி. உன்னை அடையாளம் காட்டியதற்கு.

இப்பொழுது உனக்கு கலியாணமாம். பெண் உன்னைக் காதலித்தவளாம். மதம் மாற ஒப்புக் கொண்டபடியால் நீயும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாயாம். உனக்கு இது ஒரு செட்டில்மென்ற். அவளுக்கு கருமாதி.

உனக்காக நான் எப்போதும் கலங்குவதுண்டு. எப்பொழுது நீயும் கீழ்த்தரமாக சிந்திக்கத் தலைப்பட்டாயோ அப்பொழுதே நீயும் செத்து விட்டாய்.  உன்னை உத்தமனாக எண்ணியதற்கு என்னைத் தான் நொந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நினைத்தாலும் உன்னுடன் பகிர்ந்து கொண்ட தருணங்கள்  விரக்தியடைய வைக்கின்றன. எனக்கு மாதவிடாய் வெளியே போக முடியவில்லை என்பதைக் கூட உன்னுடன் சொல்லிக் கொண்டேனே? நீ எப்படி அசிங்கமாய் நினைத்தாயோ? சுடிதார்  சால்வை காற்றில் பறப்பது கூட எனக்கு அக்கறையைக் கூட்டவில்லை உன்னுடன் இருக்கும் போது. ஆனால் நீ கண்டிப்பாய் எப்படி உணர்ந்திருப்பாய் என்று இப்பொழுது நான்  நொந்து கொள்கின்றேன்.

உன்னை நினைத்துக் கவலைப் படாமல் இருக்கச் செய்ததற்கு எனது நன்றிகள்.

வாழ்க வளமுடன்,

…………

July4, 2009

பெண்ணே உன் நாணமெங்கே?

Filed under: கதை — pukalini @ 17:16

கடைக்குப் போய் நெடு நாட்களாகி விட்டது.இன்று திடீர் சமையலுக்கு ஏற்பாடாகி இருந்தது. ஏதாவது வாங்கினால் தேவலை என்று அங்காடிக்குப் போனேன். எப்பொழுதும் தனிமையாய்ப் போவதில் அனுகூலம் இருக்கத் தான் செய்யும்.

கையில் கூடையுடன் எதையோ தேடிக் கொண்டிருந்த எனக்கு கண்ணில் மின்னல் தட்டியது. நான் நடந்து கொண்டிருந்த பாதையில் ஒரு பெண் சாவகாசமாக இருந்து எதையோ கொறித்துக் கொண்டிருந்தாள். கிட்டவாகப் போனேன். அழகென்றால் அது தான் அழகு. அப்படியே மனதைப் பறிகொடுத்து பரவசமாகி நின்றேன்.

அவளோ தன்னை ஒரு ஆண் மகன் உற்றுப் பார்க்கிறான் என்ற கவலையோ, பயமோ கொஞ்சம் கூட இல்லாமல்  தன் வேலையில் கவனமாக இருந்தாள். முழங்காலில் இருந்து,ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டு, முன்பக்கமாக பெட்டியின் மீது சாய்ந்து எதனையோ மும்முரமாகச் சாப்பிட்டிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே போட்டிருந்த குட்டைச் சட்டை பின் பக்கத்தல் மேலெழும்பி ஒரு மாதிரி இருந்தது. எனக்கு அதைப் பார்க்கக் கூட கூச்சமாயிருந்தது.

எப்படி ஒரு பெண்ணின் அழகை அவளுக்கே தெரியாமல் ரசிப்பது. அவளோ ஒரு எருமை மாடு தன்னை வெறிப்பது தெரியாமல் தன் வேலை தானுண்டு என்று இருக்கிறாள். என்னாலும் அவ்விடத்தினை விட்டகல முடியவில்லை. அவளை அப்படியே வாரி அணைக்க வேண்டும் என்று மனசு அங்கலாய்ந்து கொண்டிருந்தது.

திடீரென்று வில்லி அவளின் அம்மா உருவில் வந்தாள். மாமா போக வேண்டும் வழியை விடு என்று சொன்னது தான் தாமதம். ( நான் கேட்டனா?)மான் குட்டி போல துள்ளி எழும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் கபடமற்ற சிரிப்பில் அப்படியே இதயம் வெளியே துடித்து விழுந்தது. பாழாய்ப் போன உலகம் இரண்டு வயதுக் குழந்தையைத் தொட்டாக் கூட தப்பாக நினைக்கும். திட்டியவாறு வெளியேறினேன்.

சாயாத கொம்பிருந்தும்  தலை நிமிர்ந்து பாயாத மான். இப்படி ஒரு வசனம் அடிக்கடி தட்டுப் படும். எல்லாமிருந்தும் ஒரு  குழந்தை பெற்றுக் கொள்ள வழியில்லையே?

Create a free website or blog at WordPress.com.