புகழினி

February12, 2010

போறணை.

Filed under: அப்பு — pukalini @ 02:05

பாண் போறணை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆறடி ஆரையில இருக்கிற போயிலைப் போறணை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது. பாதித் தீவாருக்கு அது தான் வாழ்வு. நல்ல தண்ணி இல்லா ஊரில, மழைத்தண்ணியை  நம்பிச் செய்யக் கூடிய-காசு கொட்டித் தரும் ஒரே பிழைப்பு போயிலை. அதுவும் வருசத்தில தொண்ணூறு நாள் வெயில் வெக்கைக்குள்ளேயும், கொஞ்ச நாள் போறணைச் சூட்டுக்கேயும் காய்ஞ்சா கை மேல் பலன். மிச்ச நாள்களை கஞ்சியும் பினாட்டுமாகக் கழிக்க வசதியா இருக்கும்.

ஊரில எல்லா வீட்டிலேயும் ஒரு போறணை கண்டிப்பாக இருக்கும். பெருசா, சின்னனா, மத்திமமா எண்டு கன சைசுகள்.விசேசமா கிணத்தடியில தான் போறணை கட்டியிருப்பார்கள். குசினியும் அதே மாதிரித் தான். பத்தி எரிஞ்சா அணைக்க வசதியா இருக்கும். போறணை வீட்டுக்கு ஒண்டு இருந்தாலும் எல்லோருக்கும் புகை போட வராது. அனுபவத்தில படிஞ்சு வரணும். அப்பு புகை போடுறதிலேயும் கில்லாடி. ஊரில டைம் டேபிள் போட்டுக் கூப்பிடுவாங்கள்.

சோதனை எழுதி முடிச்சாப் பிறகு சும்மா இருக்க வேண்டாம் எண்டு நானும் கொஞ்ச நாள் தோட்ட வேலைக்கு போனேன். அப்பு அதில கொஞ்சத்த எனக்கு பிரிச்சுத் தந்திட்டார். செலவெல்லாம் அவரோட. ஆனா வித்து  வாற காசு முழுக்க எனக்கு. செமத்தியான அக்ரிமெண்ட். காலங் காத்தாலேயே  எழும்பித் தோட்டத்துக்கு போயிருவம். மத்த சோம்பேறிக் கூட்டங்கள் வெயில் குளிக்க வரேக்க நாங்கள்  சாப்பிட்டிட்டு படுத்திருப்பம்.

சண்டையால கன காலமா கைப்படாம இருந்த பூமி. சும்மா வீசி எறிஞ்சு விளைஞ்சு குடுத்துது. என்னளவு உயரத்தில என்னளவு நீளத்தில ஒவ்வொரு இலையும் கருவண்டு போல கறுத்து முறுகிக் கிடந்தது. வளமையாக ஒம்பது இலையில தலைப்பு உடைக்கிற அப்பு பதினொரு இலை வரைக்கும் விட்டார். ஒவ்வொரு நாளும் காலையில தோட்டத்துக்க போனா அப்பு கவலைப் படுவார். எதுக்கடா இப்படி பொலிஞ்சு கிடக்குது. பெரு மூச்சோட தான் வேலை தொடங்குவார். எனக்கு ஏனென்று புரியவேயில்லை.

வெட்டிற சீசனும் வந்தாச்சுது. அப்பு வழமையாக் கூப்பிடிற சொத்தியன்ர வண்டில விட்டிட்டு லாண்ட் மாஸ்ரருக்கு சொல்லிட்டார். அதுவும் முதல் ஏத்தம் எங்கட. முன்னூறு கண்டு வெட்டிற இடத்தில நூத்தம்பது கண்டு தான் வெட்டினார். பரவிப் போட இடம் காணெல்ல. உச்சி வெயிலுக்கேயும் பரவி விட்டுக் காய மாட்டன் எண்டிட்டுது. பெட்டிக்கேயும் கொள்ளாம வெளியில தள்ளிக் கொண்டு நிண்டுது. அப்ப தான் விளங்கிச்சுது. உன்ர தான் பெரிசு, உன்ர தான் பெரிசு எண்டு ஊரில ஏன் சொன்னாங்கள் எண்டு. மொத்தமா இருவது தரம் பிரிச்சுப் பிரிச்சு வெட்டினம்.

அப்பம்மா வீட்டில தான் புகை போட்டம்.முதல் புகை போட்டு இரண்டாம் புகையும் முடிஞ்சு காச்சல் புகை போடத் தொடங்கினம். ஒவ்வொரு வெட்டுப் போயிலையையும் அப்பு  பாதியாப் பிரிச்சுத் தான் புகை போட்டார். பாதிப் போறணை சும்மா கிடந்து சூடு காஞ்சுது. ஒவ்வொரு முடிச்சா அப்பு இழுத்து  இழுத்துப் பார்த்து தூக்கினார். அம்மம்மா ஓட்டை போட்டுக் குடுத்த ஒவ்வொரு ஊமல்க் கொட்டையையும் தட்டிப் பார்த்து தான் பரவிப் போட்டார். ஏறத்தாள முடிஞ்சு போயிற்றுது.

இன்னமும் கொஞ்சம் தான் இருந்தது. அப்பு  இந்த முறை கொஞ்சம் கனக்கவே தூக்கிட்டு புகை போட்டார். காலை ஏழு மணிக்கே புகை போட்டாச்சு. அப்பு அடுத்த புகை போட எங்கேயோ போயிட்டார். நான் வீட்ட வந்து குளிச்சுக் கொண்டிருந்தன். அன்ரி கத்திக் கொண்டு ஓடி வந்தா. டேய் போறணை எரியுதடா எண்டு. நானும் கடப்பு, பொட்டு எல்லாம் பாஞ்சு கடந்து ஓடி வந்துப பாத்தா புகை தான் வந்தது. போறணை வாசலில தொங்கிக் கொண்டிருந்த சாக்கைத் தூக்கிப் பார்த்தா உள்ளுக்க நெருப்பு பத்தி எரிஞ்சு கொண்டிருந்தது. மாறி, மாறி கிணத்தில தண்ணி அள்ளி ஊத்தினம். ஊரே கூடிச்சுது. கண்ணூறு பட்டிட்டாம். அது தான் பத்திட்டுதான்.

அப்பு ஆறுதலா பத்து மணிக்கு வந்து சேர்ந்தார். நடந்த விசயம் அவருக்கு இன்னமும் தெரியேல்ல. அப்பு எல்லாம் எரிஞ்சிட்டுது எண்டன். ஒண்டும் சொல்லேல்ல. எந்த உணர்ச்சியையும் என்னால் படிக்க முடியல. வாயை மட்டும் கொஞ்சம் திறந்திருந்தார்.அதிர்ந்து தான் போனார். மெதுவாக வந்து சாக்கைத் தூக்கிப் பார்த்தார். உள்ளே ஒரே சாம்பல் மேடு. அடிக்கடி அப்பு சொல்லுவார். டேய் காச்சல் புகை போடுற போயிலை பெற்றோல் மாதிரி, ஒரு நெருப்புப் பொறி பற்ந்தாக் காணும் முடிஞ்சுது அலுவல் எண்டு. சரிதான்.

அப்பு ஒண்டுக்கும் யோசிக்கல்ல. ஒரு கடகமும் மம்பட்டியுமா போறணைக்க போனார். மளமளவென்று எல்லாத்தையும் அள்ளிக் கொட்டிட்டு வீட்ட வந்து படுத்திட்டார். மத்தியானம் ரெண்டு மணிக்கு ஒழுப்பினார். பெரிய கத்தியும், சின்னக் கத்தியும் தீட்டி ரெடியா இருந்தது. ஒரு கட்டு பனை நாரும் உரிச்சு கிணத்தடியில ஊறிக் கொண்டிருந்தது. வெளியால போய் உள்ள பத்தையளுக்க எல்லாம் பூந்து  நீட்டுத் தடியள வெட்டிப் போட்டார்.  அதுகள களிச்சுப் போடுறது தான் என்ர வேலை. பத்தையளுக்க போக அப்பு என்னை போக விடமாட்டார். தான் சாகிற கட்டை எண்டு எல்லா ஊத்தவாழி வேலையளயும் அவரே செய்வார்.

போறணையில் எரிஞ்ச தடியளை எல்லாம் பிறக்கி வெளியால போட்டிட்டு புதுத் தடியள நாரால சட்டத்தில போட்டு இறுக்கிக் கட்டினார். அம்மம்மா கொஞ்சக் காவோலையளை இழுத்துக் கொண்டு வந்திருந்தா. எல்லாம் கட்டி முடிஞ்சாப் பிறகு காவோலைகளை உள்ள போட்டு கொளுத்தினம். போறணைக்க ஊத்தின தண்ணி காயவாம். அம்மம்மாவுக்கும் தெரிஞ்சிருக்கு. எனக்கும் இப்ப தெரியும். கடைசியா மிஞ்சினதுகளையும்  தூக்கி புகை போட்டாச்சு.

பின்னேரம் கோயிலடிக்கு வந்தா ஒரே துக்க விசாரிப்புகள். முப்பதாயிரம் எரிஞ்சிருக்குமா?  ஒரு நிமிசம் கண்ணை மூடிப் பார்த்தேன். முப்பதாயிரத்தை பத்து ரூவாத் தாளா மாத்தி எரிச்சா மிஞ்சின சாம்மலளவு தான் வந்திருக்கும். பூனையர், அது தான் எங்கட அப்பு பிழை விட மாட்டார் எண்டு வேற பச்சாதாபங்கள். இனி அப்புக்கு மரியாதை கிடையாதா? போயிலைய எரிச்சிட்டாரா? நான் தான் ஏதாவது பிசகு பண்ணி இருக்கணும்.

மறு நாளும் வந்தது. அப்பு ஒரிடமும் போகேல்ல. புகை போடக் கூட்டிக் கொண்டு போக அப்பனும் மகனுமாக ரெண்டு பேர் வீட்டுக்கே வந்திட்டாங்கள். அப்பு மறுத்திட்டார். அவங்களும் விடல. பூனையர் வாங்க. நீங்கள் வராட்டா நாங்க  எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக் கொளுத்த வேண்டியது தான் எண்டு அடம் பிடிச்சாங்கள். அங்க போனா காசுங் குடுத்து சீவுற கள்ளில நல்ல கள்ளாக் குடுத்தும் விடுவாங்கள். அப்பு எல்லார் வீட்டுக்கும் புகை போடப் போறேல்ல. ஆனாலும் இவங்களுக்கு புகை போட்டுக் குடுப்பார். ஊரில கள்ளுச் சீவுறவன் வீட்ட போய் திண்டிட்டு வாறான் எண்டு திட்டினாலும் அப்பு சீண்டுறதேயில்லை. நான் கட்டி இருந்த சாறமும் அவங்கள் வாங்கிக் குடுத்தது தான். அம்மம்மாவுஞ் சொன்னா போயிட்டு வாவன் எண்டு. வழமையா அம்மம்மா சொல்லுக்கு அப்புட்ட மரியாதை கிடையாது. ஆனா இண்டைக்கு கிடைச்சுது.  ஈச்சாக் கட்டிலில கிடந்த துவாயைத் தூக்கி தலைப்பா கட்டிக் கொண்டு வெளிக்கிட்டார்.


ஆமா, அந்த வருசம் எங்க சொந்தத்தில ஒருத்தரும் சாகேல்ல. அப்புன்ர பெரு மூச்சின் காரணம் கொஞ்சங் கொஞ்சமாத் தான் விளங்கிச்சுது.


Advertisements

June17, 2009

வேலி அடைப்பு.

Filed under: அப்பு — pukalini @ 05:58
Tags:

மத்தியான வெயிலுக்குள்  நின்று  ஓலை பொறுக்குவதற்கும் ஒரு தனித் திறமை வேண்டும். நாளைக்கு வேலி அடைப்பு. இன்றைக்கே நூறு  பனைகளில் ஓலை வெட்டி மிதிக்க வேண்டும். அப்பொழுது தான் நாளைக்கு நல்ல பதத்தில் வரும். ஏற்கனவே மூன்று பக்கத்து வேலியையும் கரையான் அரித்து பொத்தல் விழுந்து விட்டது. ஒரு ஓரமா ஒதுங்கி ஒண்டுக்கு அடிக்கவே முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனுக்கு பதுங்க வேண்டி இருக்குது.  நல்ல காலத்துக்கு அப்பாவின் சம்பளத்தில் கடனெடுத்து  முன் பக்கம் மட்டும் மதில் கட்டியாச்சு.அப்புவிடம்  வேலி அடைக்கச் சொன்னா அதுக்கப்புறம் அவர் பாத்துக்குப்பார்.

வீடு ஊருக்குள் இருந்தாலும் எல்லோருக்குமே ஒரு பனங்காணி தனியாக இருக்கும்.  எங்களுக்கும் கொஞ்சப் பனைகளோடு  சின்னதா ஒரு காணி. சும்மா நாட்களில் அந்தப் பக்கம் போவதே கிடையாது. பயம்.பனை வளவுக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கொட்டிலில் ஒரு வைரவர் கோவில்.  அந்த வைரவர் இரத்தம் குடிப்பவராம்.ஓலை வெட்டுற  நேரங்களில் அம்மம்மாவையும் கூட்டுக் கொண்டு போய் ஒரு எட்டுப் பார்ப்பதுடன் சரி. அங்கால் சற்றுப் போனால் பனைகளில் ஒட்டி இருக்கும் பூனைப் புடுக்குப் பழங்களைப் பிடுங்கிச் சாப்பிடலாம்.

நூறு பனைகளிலும் ஓலை வெட்ட நாலு பேராவது வேண்டும். ஓலை வெட்டும் காலங்களில் கள்ளுச் சீவுற பருவம் போயிருக்கும். ஆட்களைப் பிடிக்கிறதும் சுலபம். போததற்கு அப்பு வாடிக்கையா கள்ளுக் குடிக்கப் போகிறவர்கள் கண்டிப்பாக வருவார்கள். காசும் உடனேயே கொடுக்கப் படும் என்பதால் தயங்காமல் வருவார்கள். அப்பு வேறு கத்திகளை தனியாகத் தீட்டி வைத்திருப்பார். கத்தி தீட்டுறது என்பது சிலை செதுக்குவது போல. பழைய  உலக்கையை கிடத்திப் போட்டு கொஞ்சம் மண்ணைத் தூவிப் பாங்காகத் தீட்ட வேண்டும்.  தீட்டிய கத்தி பளபளக்கும். கத்தி தீட்டித் தீட்டியே உலக்கையும் தேய்ந்து போய் விட்டது.

காலையிலேயே ஓலை வெட்டுத் தொடங்கி விடும். வெட்டிய ஓலைகளை  மதிய வெயில் வரையிலும் காயப் போட்ட பின் தான் மிதிக்க வேண்டும்.இதுக்கிடையில் அம்மம்மா பன்னத்துக்கு நல்ல ஓலைகளை பொறுக்கி ஓரமா போட்டு விடுவா. அப்புவும் பட்டை பிடிக்க என்று கொஞ்ச ஓலைகளை ஒதுக்கி விடுவார். எங்களது வேலை சாரோலை சேர்க்கிறது. அப்பொழுது தான் அம்மம்மா சாயம் போட்டு பாய் பின்னித் தருவா.

மதிய வெயிலுக்குள் காய்ந்த ஓலைகளை பொறுக்கிக் கொடுக்க அப்பு மிதிக்கத் தொடங்குவார். ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு மிதிக்க மிதிக்க அது ஒரு கோடு மாதிரி வளைந்து ,வளைந்து பனைகளுக்கு இடையால் புகுந்து, நெளிந்து வரும். கடைசியில் பெரிய கல்லைப் போட்டு பாரம் கொடுத்து மிதிப்பு வேலை முடிந்து விடும். பின்னேரம் வரை அப்படியே கிடக்கும் ஓலைகளை வண்டியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு போய் திரும்பவும் ஒன்றாகப் போட்டு மிதிக்க வேண்டும்.

இரவு அம்மம்மா உழுந்து ஊற வைத்து, ஆட்டுக் கல்லில் அரைத்து புளிக்கப் போடுவா. காலையில் எப்படியும் வேலி அடைக்க பலர் வருவார்கள். சொந்தக் காரர்கள்,அப்பு போய் வேலி  அடைத்துக் கொடுத்தவர்கள், அப்புவை தங்களது வேலி அடைப்புக்கு கூப்பிடப் போகிறவர்கள் என்று ஒரு கூட்டம். அதிலும் அப்பு போய், வர முடியாதா கடன் காரர்கள் தங்களுக்கு அடைக்க வர வேண்டியவர்களையும் எங்களுக்கு மாற்றி விடுவார்கள். நல்ல பண்ட மாற்று. எலோருக்குமே  நாளைக்கு தோசையும் சம்பலும்.

காலையிலேயே அப்பு எழுந்து ஓலைகளை தெண்டல் ஓலை, சாத்தல் ஓலை என்று பிரித்துப் போடுவார். சாத்தல் ஓலை குத்திக் குத்தி வைக்க, தெண்டல் ஓலை சரித்து ஒன்றுக்குள் ஒன்றை வைத்து முட்டுக் கொடுக்க. சாத்தல் ஓலை எப்பொழுதும் உயரமாகவும், பரப்பில் பெரிதாகவும் இருக்கும். தெண்டல் ஓலை அனேகமாகப் பிய்ந்து,கிழிந்து போயிருக்கும். அம்மம்மா அடுப்படியில் கங்கு மட்டையைப் போட்டு எரித்து தோசை சுடுவதில் மும்ம்முரம்மாக இருப்பா.

என் வேலை தெரிந்த ஓலைகளை பொறுக்கி கொண்டு போய் போடுவது தான். காலையில் ஆட்கள் சேர்ந்ததும் அப்பு கோவணத்தைக் கட்டிக் கொண்டு குந்தி இருந்தாரெண்டால் முன்று பக்க வேலியும் அடைச்சாப் பிறகு தான் எழும்புவார். அனேகமாகா வேலி வெளிப்புறமாகத்  தான் அடைக்கப் படும். நான் வீட்டு வளவுக்குள் வந்து குத்தூசியில் வரும் கயிற்றை வாங்கி திரும்பவும் குத்தி விடுவேன். கயிறு விலை கூடிய காலங்களில் எல்லாம் அப்பு பனை நாரையோ, தென்னம் பாளையைக் கிளித்தோ கட்டுவதற்கு ஏதாவது தயார் பண்ணி விடுவார்.


வேலி அடைப்பு வேகமாகப் போய்க் கொண்டு இருக்கும் . சாத்தல் ஓலையை வைத்து  பின் தெண்டி, பிறகு சாத்தி மட்டைகளை வைத்துக் கட்ட வேண்டும். அப்பு மள மளவென ஓலைகளின்  உயரத்தைப் பார்த்து மட்டையை அடியால் வெட்டித் தள்ளிக் கொண்டு தெண்டிக் கொண்டே போவார். குத்தூசியால் குத்திக் கட்டுபவர்களும், அமத்திப் பிடிப்பவர்களும் அவருக்குப் பின்னால் ஓட வேண்டும்.வேலி அடைத்து முடிந்த பின் பச்சை ஓலைகளை மாடு தின்னாமலிருக்க சாணியைக் கரைத்தோ இல்லை கழிவு எண்ணெயைத் தெளித்தோமணத்தை நீக்குவார்கள்.


பொட்டு, கடப்பு, கதியால்களும் தொடரும்…

(அப்புவின் நினைவுகளை எடுத்துச் செல்ல எழுத வேண்டும். பலருக்கும் இவை புரியாது. மற்றவை மட்டும் புரிந்து விட்டனவா? இதில் விடுபட்ட சம்பவங்கள் பின்னாளில் வரும். ஏதோ அப்புவுக்கு நான் செய்யப் போகும் ஒரு பாராட்டுப் பரிசு.)

Create a free website or blog at WordPress.com.