தீபாவளிக் கூட்டம். எங்கும் கச கச என்று ஒரே மக்கள் திரள். அங்கு, இங்கு அசையவே முடியவில்லை.இன்னும் அரை மணி நேரம் தாமதமாகத் தான் நாகர்கோவில் போகும் பயணிகள் புகைவண்டி வந்து சேரும். அதற்கிடையில் இங்கு இருந்தால் மூச்சுத் திணறிச் செத்து விடுவார்கள். இந்த சமுத்திரத்துக்குள் முத்துக் குளிப்பது போலத் தான் உள்ளே ஏறுவதும், ஆக மிஞ்சிப் போனால் ஒற்றைக் காலில் நிற்பதும்.
நினைத்த மாதிரியே மேலும் அரை மணி நேரம் தாமதமாக வண்டி ஆடி அசைந்து வந்தது. வரும் போதே தெரிந்தது மக்கள் தொங்கிக் கொண்டு வருவது. ஏற்கனவே தாமதம். பணம் கட்டி சீட்டுக்களையும் வாங்கியாகி விட்டது. இந்த நெரிசலுக்குள் அடம்பிடித்து ஏறி எங்களது பிரயாணத்தை உறுதிப் படுத்தாவிட்டால் அப்புறம் என்ன வாலிப முறுக்கு. நானோ எமன் மாதிரி கையில் பையுடன் நிற்கிறேன். என்னுடன் கூட வந்த நண்பனோ எமகாதன் மாதிரி என்னிலும் இருமடங்கு அளவில் வண்டியையே இழுத்து நிறுத்துவது போல் நிற்கிறான்.
ஒரு மாதிரி அடம்பிடித்து உள்ளே கால் வைத்து ஏறியாகி விட்டது. கையில் உள்ள பையையே கீழே வைக்க இடமில்லை. நிற்பதற்குக் கூட இடமில்லை. வாசனை அடித்து நொருக்கும் கழிப்பறைக்கு முன் ஒற்றைக் காலில் நிற்பதற்குத் தான் இடம் கிடைத்தது. பலத்த சத்தம். அனேகமானோர் திருப்பூரில் இருந்து ஊருக்குப் போபவர்கள். கழிப்பறை செல்லும் வழி முழுவதையும் அடைத்து நானும் எனது நண்பனும் நின்றவாறே பயணத்தைத் தொடங்கினோம்.
உள்ளே கண்ணுக்கு எட்டும் தொலைவில் இரண்டு இளம் பெண்கள், பொருட்கள் வைக்கும் பலகையில் பொருட்களுக்கு மேல் நன்றாக காலை விரித்துப் போட்டுக் கொண்டு இருந்தார்கள். கீழே கவனிக்கத் தக்கவாறு ஒரு பழங்கிழம். நெற்றி முழுவதும் திருநீற்றுப் பட்டை. அவருக்கு முன்னால் வாளிப்பான ஒரு பெண். சிறுமிக்கு அதிகம். பெண்ணுக்கு குறைவு.
எங்களது பக்கம் ஒரு வாயில் படியில் இரு சிறுவர்கள். ஒருத்தனுக்கு வயது 15 இருக்கும். அடுத்தவனுக்கு 13 வரும். அண்ணன் தம்பியாம். இன்னும் பலர். முக்கியமாக ஒருத்தன். வயது நாற்பதுக்கு பக்கம் இருக்கும். நெடு நெடு என்று வளர்ந்திருந்தான். தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இடம் பக்கம் வகிர்ந்து சீவி விட்டிருந்தான். வாயிலிருந்து பீடி நாத்தம் கப கப என்று வந்து கொண்டிருந்தது.
வண்டி அசைய ஆரம்பித்தது. என் நண்பன் முன்னால் காலை விரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வலை வீசிக் கொண்டிருந்தான். போட்டியாக அந்த முக்கியமானவன். எனக்கு வாய்த்தது கழிப்பறை வாசம் தான். எப்படியும் நண்பன் அந்த இரண்டுக்கும் அருகில் போய் விடுவான். நான் நிற்பதற்காவது கொஞ்ச இடம் கிடைக்கும்.
பக்கத்திலிருந்த இரண்டு சிறுவர்களும் கலாட்டா பண்ண ஆரம்பித்தார்கள். வண்டியில் நான் இருந்த பெட்டி முழுவது ஒரே கசமுசா. திருப்பூரிலிருந்தே இப்படித் தான் ஆட்டம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் வயதுக்கு அதிகம் தான். பெரியவன் படியில் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்தான். வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், வசனங்களும் காது கொடுத்து கேட்கிற மாதிரி இல்லை. இந்த வயதுக்குள் இப்படியா? திருப்பூரின் வளர்ச்சியோ?எல்லோரும் அவனுக்கு புத்திமதி சொல்ல கிளம்பினார்கள்.ம்ம்ம். ஒரு அசுமாத்தத்தினையும் காணோம்.
கையில் பீடியை எடுத்து பற்றினான். எல்லோர் மூஞ்சியிலும் புகை விட்டான். தம்பிக்காரன் அது மட்டும் பண்ணவில்லை.எல்லோர் திட்டும் சேர்ந்து கொண்டது. போதாதற்கு படிக் கம்பியினைப் பிடித்துத் தொங்கி பெட்டிக்குள் இருந்த இளம் பெண்ணின் மீதும் எட்டி, எட்டி புகை அடித்தான். கிழம் கிளம்பியது. நெற்றியைச் சுருக்கி திருநீறு முகத்தின் மீது விழ திட்டியது. அந்தச் சின்னப் பெண் அவரின் மகளோ, பேத்தியோ? பொடியா உள்ள வா. என்ன தான் அநியாயம் செய்தாலும் பரவாயில்லை. கம்பியில் தொங்காத. என் வயதுக்காவது மரியாதை தா. நான் எத்தனையோ விபத்துக்களை பார்த்திருக்கேன். கம்பியைப் பிடித்து ஆடாத. கவனம்.
தேறவில்லை. ஆகவும் அட்டகாசம் தாங்கவில்லை. நண்பனும் நல்லவனுக்கு நடித்து பொருட்கள் வைக்கும் பலகையில் இடம் பிடித்துக் கொண்டான். முன்னுக்கு நின்ற முக்கியமானவனும் அந்த இருவருக்கும் பாடம் புகட்டப் போறதாகச் சொல்லிக் கொண்டு வாயில்ப் படிக்குள் போய் விட்டான். நானும் மெதுவாக நகர்ந்து பெட்டிக்குள் புகுந்து கொண்டேன்.கொடுமுடி கடந்த பின் திடீரென்று ஒரு நிசப்தம். வண்டிச் சத்தம் மட்டும் கேட்டது. மெது மெதுவாக தகவல் கசிந்தது.அந்த அட்டகாசப் பெரியவன் ஓடுகின்ற வண்டியில் இருந்தே கீழே விழுந்திட்டானாம். ஒருத்தரும் ஒன்றும் பேசாமல் இருந்தனர். யார்மே கவலைப் படவில்லை.கிழம் மட்டும் இப்படித்தான் அங்கேயும் நடந்தது என்று பழங்கதை கூறிக் கொண்டு வந்தது.
எனக்கு என்ன் நடந்ததென்று புரிந்து விட்டது. நடந்தது மிகவும் நல்லது. அவன் இப்பவே இப்படி என்றால் பின்னாளில்? நான் ஒன்று செய்ய நினைத்தேன். அது யார் மூலமாகவோ நடந்து விட்டது. ஆக மொத்தம் காரியம் நல்லது. நடத்தியவன் நல்லவனா? கெட்டவனா? அது நமக்கு முக்கியம் இல்லையே? வண்டி ஓடும் வேகத்துக்கு தப்புவது கடினம். அதுவும் சில்லுக்குள் அகப்பட்டால் சவப் பெட்டிச் செலவும் மிச்சம்.
வண்டி மதுரைக்குள் ஆடி அசைந்து நுழைந்தது. ஒரு கொலையின் தடங்களை மறைத்துக் கொண்டு கீச்சிட்டுக் கொண்டு நின்றது. மக்களும் அடித்துப் பிடித்து உள்ளே ஏறினார்கள். நானும் நண்பனும் இறங்கி நடந்தோம். அந்த முக்கியமானவனும் முன்னுக்குப் போய்க் கொண்டிருந்தான். டேய், அவன் தானா விழவில்லையடா. இவன் தான் தள்ளி விட்டிட்டான். நண்பனுக்கு வியர்த்தது. எப்படித் தெரியும்? எனக்கு நிச்சயமாத் தெரியும். இப்ப இன்ன செய்யலாம். விட்டுத் தொலை. நமக்கேன் வீண் வம்பு. சனியன் தொலைந்தது.
கவனமாக அவனுக்குப் பின்னாலேயே போனோம். முன்னுக்குப் போன பெண் அவனைப் பார்த்துச் சிரித்தாள். நெருங்கிப் பார்த்ததில் அவன் அவளை உரசுவது அப்பட்டமாகத் தெரிந்தது. நண்பன் என்னை உற்றுப் பார்த்தான். நான் அவனை நெருங்கினேன்.
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு ‘The Interesting Blog’ அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் / பின்னூட்டத்தைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
Comment by ஜெகநாதன். க — July21, 2009 @ 12:21
அருமையான கட்டுரை
Comment by Sureshkumar — July31, 2009 @ 02:53
படித்தேன். எப்படிமொத்த மக்களும் இவ்வளவு வக்கிரமாக போய்விடுகிறார்கள்? ஆமாம், கதை முடிந்து விட்டதா அல்லது இன்னும் இருக்கிறதா?
Comment by ஜெகநாதன். க — August2, 2009 @ 10:49