புகழினி

June2, 2009

பட்டை.

Filed under: சமுகம் — pukalini @ 19:04

காலையிலேயே முற்றத்தில் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. வாங்கிலில் காலை அகட்டிப் படுத்திருந்த எனக்கு முதுகுக்கு கீழே வியர்த்திருந்தது, அப்பொழுது தான் குளிரத் தொடங்கி இருந்தது. எப்பவும் இப்படித் தான். தலையை மாற்றிப் படுப்பம் எண்டால் விடுறதில்லை. சவத்தைத் தான் தெற்கு வாட்டில் படுக்க வைப்பார்களாம்.  வேற யாரு இந்த நேரத்தில் ஓலையைக் கிழிக்க முடியும். கண்டிப்பாக அப்பு தான்.

நேற்று பின்னேரமே கிணற்று முற்றத்தை அடை கட்டி மண்ணைப் போட்டுட்டு,  தண்ணி அள்ளி ஊற்றிக் கொண்டு இருந்தவர். பிறகு ஓலையை நனையப் போட்டிருக்கலாம். அது தான் காலங் காத்தேலேயே எழும்பி பட்டை பிடிக்கிறார்.  அதுவே ஒரு கலை. ஊரில் பட்டை பிடிக்கத் தெரிந்தவர்கள் கொஞ்சப் பேர் தான்.அதிலும் சொன்னபடி  கேட்கிற மாதிரிப் பட்டை பிடிக்கிறதில அப்புவை மிஞ்ச முடியாது.

பருவ காலத்தில் வேலி அடைப்புக்கு பனை ஓலை வெட்டும் போதே அப்பு பட்டை பிடிக்கிறதுக்கு எண்டு ஓலைகளைத் தெரிவு செய்து வைத்து விடுவார். அது எப்படியும் ஒரு மூலையில் தோட்ட காலம் வரும் வரை  கிடக்கும். அப்புறம் தான் அதன் தேவை. சிலருக்கு பட்டையும் பிடிக்கத் தெரியாது, ஓலையும்  எடுத்து வைக்கத் தெரியாது. கடைசி நேரங்களில் வந்து அப்புவிடம் திட்டு வாங்குறது பத்து வீட்டுக் கேட்கும்.

ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய ஓலையை பதமாக எடுத்து  அடியில் இருக்கும் கருக்கை வெட்டி விட்டு ஒரு சாண் நீளத்தில் மடிக்க வேண்டும். அங்கிருந்து ஒரு முழத்துக்கு எடுத்து ஈர்க்குகளை வளைத்து  திரும்பவும் ஒரு சாண் விட்டு ஈர்க்குகளை முறியாமல் மடித்து, ஓலையின் இரு நுனிகளையும் இணைத்து கட்ட வேண்டும். பாரம் தூக்க வசதியாக மரக்கட்டையை வைத்துக் கட்டி கைப்பிடியும் சரிக்கட்டினால் பட்டை தயாராகி விடும். பார்ப்பதற்கு குட்டிப் படகு போலிருக்கும் பட்டையின் அளவைப் பொறுத்து தண்ணீரின் அளவும் வேறுபடும்.

பட்டையை செய்யுறது மட்டுமில்லை, பாவிப்பதும் மிகக் கடினம். அப்பு அதனையும் எனக்கு சொல்லித் தந்தார். ஆனா பட்டை செய்யுறதுக்கு சொல்லித் தரவில்லை. தன்னுடன் போய்ச் சேரட்டும் என்றோ தெரியவில்லை.

மழைகாலத்தில்  கை விட்டு அள்ளும் ஆழத்தில் மிதக்கும் தண்ணீரை பட்டையில் அள்ளி பதி வைக்கப் பட்டிருக்கும் கன்றுகளுக்கு ஊற்றுவது நூதனமாகும். தண்ணீருக்குள் கையை விட்டு, வெளியே அள்ளி ஊற்றி விட்டு கீழே விழும் தண்ணீரைக் கையால் அணைத்து கீழே விழச் செய்ய வேண்டும். அனுபவப் பட்டவர் ஊற்றினால் தெரியும். அப்படியே வட்ட வடிவாய் தண்ணீர் விழுந்து சிதறிய அடையாளம் ஈரலிப்பாய் துலங்கும்.

எனக்கு அது கூடக் கைவரவில்லை. தண்ணீரை அப்படியே மொண்டு ஊற்றி செடிகளின் புது இலைகளை உடைத்தது தான் மிச்சம். அப்புவின் கழுகுக் கண்களுக்கு எப்படியும் மாட்டி விடும். அப்புறம் என்ன? தோட்டத்தில் கிடக்கும் மண்ணாங்கட்டிகள் எல்லாம் பல் குழல் ஏவுகணைகள் போல் என்னை நோக்கிப் பறக்க, நானோ ஒதுங்க இடமில்லாமல் புதுமாத்தளனில் மாட்டியவன் போல் ஓடுப் பட்டு திரியவும் சரியா இருக்கும். போதாதற்கு வசை மழை வேறு. ‘உனக்கு ஓ—– சாமனை இறைப்பில விட்டா என்ன?’  என்ன அர்த்தமோ தெரியவில்லை.  வேலையில் பழுது கண்டா அப்புவிடம் தப்ப முடியாது.

அதிலும் பாரம் தாங்க முடியாமல் பட்டையைக் கீழே வைத்தாலோ, சரி அப்பளம் மாதிரி நொருங்கி விடும். தண்ணீரை வெளியாக்கி விட்ட பின்னர் தான் கீழே வைக்க முடியும். தட்டுப் பட்டாலோ வெடித்து ஓட்டை வந்து விடும். பிறகு அந்த ஓட்டை அடைக்க தாரைப் போட்டோ இல்லை றெஜிபோமை பெற்றோலில்  நனைத்து உருக்கியோ ஒட்ட வேண்டும்.

இப்பொழுதெல்லாம் தகரப் பட்டைகள் வந்தாலும் ஓலைப் பட்டைக்கு தான் மவுசு அதிகம். செலவு குறைவு. அடுத்தது பாரம் குறைவு. இப்பொழுது காலம் மாறிப் போச்சு. யாருக்கு பட்டை பிடிக்கத் தெரியும். சாதாரண கூழ்ப் பிளாவே பிடிக்கத் தெரியாத நானெல்லாம் என்னத்தை சாதிக்க முடியும்.

அப்புவுடன் பட்டையும் போச்சு….

Advertisements

3 Comments »

  1. பட்டையைப் பற்றிய நல்ல நிகழ்வு, பகிர்வுக்கு நன்றி நண்பா

    Comment by ஆ.ஞானசேகரன் — June2, 2009 @ 21:03

  2. நண்பா அருமையான எழுத்து நடை என்று புரிகிறது.
    ஆனாலும் முழு கருத்தையும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.
    எனினும் நன்றாய் இருக்கிறது.

    உங்களின் மற்ற இடுகைகளையும் படித்தேன்.
    கருத்து சொல்ல பயம். ஏனென்றால் உங்கள் எழுத்துக்களின் புரிவதில் உள்ள கஷ்டம்தான்.

    நன்றி

    Comment by ஜுர்கன் — June4, 2009 @ 02:52

  3. அருமையான எழுத்துநடை. உங்களின் மற்றைய பதிவுகளினின்றும் வித்தியாசமாக இருக்கிறது இந்த நடை.
    அப்படியே சின்னவயது சம்பவங்களை(பட்டையால் தண்ணியள்ளி புகையிலைச் செடிகளுக்கு தெளித்த) ஞாபகப்படுத்துகிறது

    Comment by velanaivalasu — June11, 2009 @ 06:44


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: