புகழினி

May30, 2009

அப்பு செத்திட்டார்….

Filed under: சமுகம் — pukalini @ 19:18

அந்தி மயங்கும் மாலை வேளை. கைத்தொலைபேசி  என்றுமில்லாதவாறு அலறியது.தகவல்,அப்புக்கு சுகமில்லையாம், உடனே கிளம்பி வரவுமாம்.இப்போது பொழுது பட்டு விட்டது. இனிக் காலையில் தான் புறப்பட முடியும். இரண்டு சோதனைச் சாவடிகளையும் கடந்து ஊர் போய்ச் சேர எப்படியும் நாளை மதியம் கடந்து விடும்.

இதற்கிடையில் அப்புக்கு என்ன வந்தது?

எழுபது வயதிலும் கம்பி போல திரிந்து கொண்டிருந்தவர். கடந்த வாரம் கூட என்னைப் பார்க்க வந்து, வங்கியில் தன் பெயரில் இருந்த பணமெல்லாத்தையும் என் பெயரில் மாற்றி விட்டுத் தான் போனவர். அதிலும், குடித்து விட்டு கும்மாளம் போடுவார் என்றெண்ணி வெறும் பயணச் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு வழி அனுப்பினேன். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் பாவம் அப்பு தண்ணி குடிக்கக் கூட காசு குடுக்கேல்லையே என்று கவலையும், பயமும். காலையில் தகவல் வருகிறது, அப்பு நல்ல மப்பில் தான் வீட்ட வந்தவராம். எப்படி? அவர் எப்பொழுதும் இப்படித் தான் என்ன செய்வார்? ஏன் என்று புரிவதில்லை.

பிறந்து, வளர்ந்தது முதல் அப்பா, அம்மாவை விட அப்புவும், அம்மம்மாவும் தான் என்னை வளர்த்ததும், சீராட்டியதும் அதிகம். என் முழுப் பொறுப்பும் அவர்களில் தான் தங்கி இருந்தது. போடுற யட்டியில் இருந்து கையில் கட்டும் தங்க மூலாமிட்ட கடிகாரம் வரைக்கும். ஊரில் எவனாவது புதிதாக வந்திருந்தாலோ, பெடியள் ஏதாவது போட்டிருந்தாலோ அவர்களுக்கு மோப்பம் பிடித்து விடும். டேய் பொக்ஸ் சேட் எண்டு வந்துருக்காம், வாங்கிப் போடன். எனக்கு என்னெண்டே தெரிந்திருக்காது. கடைக்குப் போனாத் தான் தெரியும். டேய் அவன் புதுச் செருப்புப் போட்டிருக்கானாம். நீயும் வாங்கடா….அப்புவுக்கு தீபாவளி, தைப்பொங்கல், வருடப் பிறப்புகளுக்குத் தான் புது உடுப்பு வரும். புது உடுப்பு எனக்கு, எனது பழைய உடுப்பு புதிதாக அவருக்கு.

அவர்களுடன் தங்கினால் ராஜ யோகம் தான். காலையில் ஐந்து மணிக்கே எழுந்திருந்து தேநீர் போட்டு தலை மாட்டில் வந்திருக்கும். அம்மம்மாவுக்கும் சேர்த்து. சிலவேளைகளில் சுருட்டுப் பிடித்துக் கொண்டு வானொலிப் பெட்டியைத் திருகிக் கொண்டிருப்பார். அதிலும் காலை வேளையில் ஐபீசி கேட்பன் என்று தெரிந்து குறுக்கலையில் மீட்டர் போட்டுக் கொண்டிருப்பார். அப்பேயும் காதும் கூர்மை. இல்லாவிட்டால் நான் கொண்டுபோயிருக்கும் பொன்னியின் செல்வனை எங்காவது ஒரு பக்கத்தில் இருந்து புரட்டுவார். ஆங்கிலப் புத்தகங்களாக இருந்தால் படம் பார்ப்பார். இது வரைக்கும் அப்பு பள்ளிக் கூடம்  போனதாகச் சொன்னதில்லை. இருந்தாலும், மாலை வேளைகளில் வாசிகசாலை போய் பத்திரிக்கை படிக்காமல் விட்டதில்லை. அம்மம்மா சொல்லி இருக்கா, வெள்ளைச் சட்டைக்கு முட்கிளுவை  முள்ளைக் குத்திக் கொண்டு பள்ளிக்குப் போனதாக.

தோட்ட வேலை நேரங்களில் அப்புவைப் பிடிப்பது கடினம். காலையிலேயே எழுந்திருந்து கிளம்பி இருப்பார். தூக்கக் கலக்கத்தில் நானும் கூடப் போவன். நாம் வெயில் கிளம்ப முன் வீடு திரும்ப , அப்பொழுது தான் ஊர்ச் சனம் வேலைக்குப் போகும் வெயிலுக்க காய. அப்புவிடம் எப்பொழுதும் ஒரு கூட்டம் பின்னுக்கு நிக்கும். ஆலோசனை கேட்கவும், மேற்பார்வை இடக் கேட்கவும். அப்புவின் திறமைக்கும், ஆலோசனைக்கும் சாட்சிகள். அதிலும் கொடுக்கும் கூலியும் அதிகம், தண்ணி தனியாக. அப்பொழுது தான் அடுத்த முறை அப்பு போவார். இருந்தாலும் மதியம் வீட்டுக்கு கள்ளு கலனில் வந்திரும். மாதக் கடைசியில் தான் காசு. எனக்கென்றால் தனியாக ஒரு போத்தலில் தனிப்பனைக் கள்ளு.


அப்பு அடிக்கடி அம்மம்மாவை சொல்லித் திட்டுவது வேலைகாரனுக்கு கூழ், ஓக்—கிறவனுக்கு கஞ்சி எண்டு. அதாவது அம்மம்மா என்னை நல்லாக் கவனிக்கிறாவாம். இருபது வயதிலும் சோத்து மாடு மாதிரி சுத்திக் கொண்டு திரிஞ்ச எனக்கு எல்லாமே அதிகம் தான். அதுகும் தோட்ட வேலைகளுக்குப் போய் வந்தால் மதியம் கடல் தாமரை வங்கி வந்து வேலியில் தொங்கும்.  இடுப்பு நோவுக்கு நல்லதாம். அப்பு தான் கழுவிச் சமைப்பார். நல்லாக் கழுவாட்டி மணக்குமாம். மாலை வேளைகளில் பெரிய அண்டாவில் தண்ணி சுடவைத்து ஒரு குளியல். சும்மா வெயிலுக்கு ஒதுங்கி, நிழலுக்க இருந்தவனுக்கு. நாள் முழுவதும் வெயிலுக்க காய்ஞ்சவருக்கு வெறும் சாயா மட்டும். பொத்திப் பொத்தி வைச்சு என்னத்தைக் கண்டினமோ?

இருந்தாலும் அப்புவுக்கும், அம்மம்மாவுக்கும் மனசில் ஒரு கவலை. அவர்களின் பிள்ளைகள் எல்லாம் மக்காச் சோளம் போலிருக்க, நான் மட்டும் கரடி நிறத்தில இருக்குறன் எண்டு. என்ன செய்யிறது எங்க அப்பா அப்பிடி?


அப்புவிடம் நான் கற்றது உழைப்பு.அடுத்தது தன் நம்பிக்கை.

அப்பு வருவார்..

5 Comments »

  1. http://anjady.blogspot.com/ ungal paarvaiku

    Comment by navin — May30, 2009 @ 20:14

  2. http://anjady.blogspot.com/

    Comment by navin — May30, 2009 @ 20:14

  3. Does anyone know where I can find free online grant applications?

    Comment by Extenze — August19, 2009 @ 13:20

  4. Wow! Thank you! I always wanted to write in my site something like that. Can I take part of your post to my blog?

    Comment by buyvigrx — September13, 2009 @ 10:17

  5. Generally I do not post on blogs, but I would like to say that this post really forced me to do so! really nice post.

    Comment by buyvigrx — October8, 2009 @ 20:56


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Create a free website or blog at WordPress.com.