புகழினி

January23, 2009

அந்த ஒரு நாள்

Filed under: சமுகம் — pukalini @ 00:54

காலையில் சீக்கிரமாகவே சங்கை ஊதியாச்சு போலிருந்தது. அந்தச் சங்கொலி தான் அவனுக்கு தூக்கக் கலைப்பான். அவனுக்கு இன்னமும் தூக்கக் கலக்கம் போகவில்லை. சற்று முன்னர் தான் பிய்ந்து போன படுக்கையைத் தட்டி விட்டுப் புரண்டு படுத்ததாக ஞாபகம். அதற்கிடையில் விடிந்து விட்டதா? பாழாய்ப் போன சூரியனுக்கும் வேலை வெட்டி என்பது இருந்தால் தானே மனிதர் படும் கஷ்டங்களை கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும். பாவம் அவனும் என்ன செய்வான் தன்னை எரித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிறான். மெழுகுதிரியைக் கூட உதாரணம் காட்டுபவர்கள் சூரியனைத் தியாகத்துக்கு உதாரணம் காட்ட விரும்புவதில்லை. மெழுகுதிரிக்கும் அப்பன் அவன் தான் என்று பாழப் போன மனுசப் பிறப்புகளுக்கு எப்பொழுது தான் மண்டையில் உறைக்கப் போகுதோ?

இனியும் படுத்திருக்க கட்டாது. பாயை எட்டி நெம்பித் தள்ளினான். அது ஒரு மூலையில் போய் சுருண்டு கொண்டது. தன்னைத் தானே நொந்து கொண்டான். ஆமா, அப்புறம் இரவுப் படுக்கைக்கு அது தானே கொஞ்சமாவது உடம்புக்கும் தரைக்கும் இடையில் தடையை போடப் போகுறது. மூலையில் ஓடுதோ என ஆடிக் கொண்டிருந்த கடிகாரத்தை முறைத்தான். இன்னமும் பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கு. இல்லாவிட்டால் வாற அரசுப் பேருந்துக்கு இன்னமும் பத்து நிமிடம் காத்து இருக்க வேண்டும். இருக்கலாம் அப்பிடியே பாதி நாள் சம்பளத்தை கோட்டை விட வேண்டியது தான்.

அவனுக்கு எப்பவுமே அந்த பேருந்தில் போகத்தான் பிடிக்கும். ஏனென்றால் அதில் தான் படம் போடுவார்கள். கொடுக்கிற காசுக்கு அங்கேயாவது கொஞ்சம் பொழுதப் போக்கலாம். இல்லாவிட்டல் வேறு என்ன மார்க்கமுண்டு? இன்னமொரு காரணமும் உண்டு. அது தான் பருவகாலச் சீட்டு. மாதத் தொடக்கத்திலேயே எடுத்திருவான். இல்லாவிட்டால் மாசக் கடைசியில் வேலைக்குப் போகவே காசில்லாமல் தாடியைச் சொறிய வேண்டி வரும். அதனால் இது ஒரு முன்னேற்பாடு.

பேருந்து நிலையத்துக்கும் வந்தாச்சு. வழமையான வாசனைகள் கொஞ்சம் குறைந்திருந்தது போலிருந்தது. நேற்று மாலை பெய்த மழையின் புண்ணியத்தில் உள்ள கழிவுகள் எல்லாம் அடித்துக் கொண்டு போயிட்டுது போல. போய் எங்கே போய்ச் சேரப் போகுது? ஏதாவது ஆறோ , வாய்க்காலோ? அப்பிடியே போனாலும் கடைசியில போறது அவனை மாதிரி ஒரு மனிதனின் வாய் வழி தானே? வழமையான பிச்சைக்காரியைக் காணம். மழைக்க நனைஞ்சு எங்காவது சுருண்டு படுத்திருக்கும். பேருந்தும் வந்தாச்சு. அடிச்சுப் பிடிச்சு ஏறி ஒரு ஓரமா இடம் பிடித்து உட்கார்ந்தான். எப்பவும் இந்த அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் நெருங்கி வழிவார்கள். அந்த நடத்துனரைப் பார்த்தே இந்த உலகத்தைப் படித்துக் கொள்ளலாம். பிள்ளைகள் வந்தால் போதும் அந்தாளின் மூஞ்சி சிடுசிடுத்துப் போகும். வருமானம் குறையுமாம். அவர்களை தன்னுடைய குழந்தைகள் போல் கவனிக்க வேண்டாம், குறைந்தது மனித வர்க்கமென்றாவது நோக்க வேண்டாமா? ஏதோ கந்திரிக்கு கூட்டிக் கொண்டு போவது போல அடைஞ்சு கொள்ளுவான். எங்காவது இடம் இருந்தாலும் விட மாட்டான். உள்ள போ, உள்ள போ என்று புலம்புவான். பழகிப் போச்சுப் போல. அவன் எப்போதாவது தன்னுடைய பிள்ளைகளும் இப்படி ஓட்டை பேருந்தில் தான் ஒட்டிக் கொண்டு போய் வருகிறார்கள் என்றோ, அவர்களும் இப்படித் தான் திட்டு வாங்குவார்கள் என்றோ நினைத்துப் பார்த்திருப்பானா?

அரை மணி நேரப் பயணம், சுடுகாட்டுக்குப் போய்ச் சேர. அந்தச் சுடுகாட்டில அவனுக்கு தான் வேலை. அவனைப் போல ஆயிரமாயிரம் பேர் அந்தச் சுடலையில் உயிர் கொடுப்பதனால் தான் பல தட்டுக் கட்டடங்கள் எல்லாம் கம்பீரமாய் எழுந்து நிற்கின்றன. எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது, சீமெந்து தூசி நுரையீரலினை அடைக்கும் என்று. இருந்தாலும் அது வயிறு உலர்வதை தடுக்கும் போது யார் தான் அங்கு நுழைய மாட்டார்கள்?

மதியச் சாப்பாடும் முடிந்து விட்டது. துண்டு பீடி பத்தவும் பணமில்லை. கடன் கேட்கவும் தன் மானம் தடுக்கிறது. வேண்டாம், இனி வீடு போய்ச் சேரலாம். கையில கொஞ்சம் காசு சேரட்டும். நானும் செய்யது பீடி வாங்கி வட்ட வட்டமாப் புகை விடுவன் என்று மனதுக்குள் ஒரு கறுவல். நம்பிக்கை.

இரவு மீண்டும் அதே படுக்கை. அந்த அறையில் அவன் தனியே. முகட்டு நீக்கலுக்கால் சந்திரனும் சுடத் தொடங்கினான். எப்பிடியோ இன்றைய ஒரு நாள் கழிந்து விட்டது. யாரை எதிர்பார்த்து அவன் வீட்டுக்கு வந்தான்? யாருக்காக வேலைக்கும் போனான்? எதற்காக இந்த சடலத்தை கொண்டு திரியுறான்? விடியும் வரை தூங்கலாம். மறு நாள் விடியல் அவனுக்கு பூப்பந்தலா போட்டு வைத்திருக்க்ப் போகிறது?

ஒவ்வொரு நாளும் இன்றைய ஒரு நாளைக் கழிக்க எவ்வளவு சிரமம். அப்படியாயின் நாளைய ஒரு நாள்?

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: