மாமா இறந்து விட்டார். குடிகாரன். வழக்கமான மரணம். ஈரல் வெடித்து வாய், மூக்கு, சல வாசல், மலவாசல் வழியாக இரத்தம் கட்டி கட்டியாகக் கொட்டி இரண்டு மணி நேரத்தில் வலிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார். மச்சான் வெளி நாட்டில் வருவதற்கு ஒரு வார காலம் எடுக்கும். சவத்தை பதப்படுத்தி வீட்டில் வைத்தாச்சு. அங்கு தான் என் காதல் தேவதையின் தரிசனம் ஆரம்பம்.
அவள் மச்சானின் மனைவி வழியில் உறவாம். வயசு பதினைந்து இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. செம பிகரு தான். சவம் கிடப்பதற்கு நல்ல காவல். என் தூக்கத்தை அவள் தான் பறித்து விட்டாளே?எனக்கும் என்ன வசசு இருபது தானே? திரியில்லாமலேயே பத்திக்கிச்சு. மாமா வீட்டில் யாரும் இல்லை. மச்சாள் மட்டும். அதனால் நான் எடுபிடி. கொஞ்சம் விளப்பமாவே இருந்த படியால் நிறைய வேலைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு செய்தேன். அவளுக்கும் என் துடிப்பும், எடுப்பும் பிடித்துப் போய் விட்டது போல. மச்சான் வருவத்ற்கு இடையிலேயே எங்களுக்குள் ஒரு சிலந்தி காதல் வலை கட்டி விட்டது.
சவம் வீட்டிற்குள் படுத்திருப்பது தெரியாமல் எங்கள் காதலும் செம கதியில் சுதி கூட்டிக் கொண்டிருந்தது.இடையில் ஒரு சம்பவம். மச்சாளின் புதுச் செருப்பைக் காணவில்லை. முந்நூறு தேறுமாம். விசாரணைக் கமிஷன் என் தலைமையில். காரண காரியங்களையும் சாட்சிகளின் வழி மொழிதல்களுடன் என் இதயத் திருடி தான் செருப்பையும் திருடியது நிரூபண்மாயிற்று.
மனசு அப்படி இருக்கக் கூடாதா என்று ஏங்கத் தொடங்கியது. சவம் வெளியேறி விட்டது. தீர்ப்பு நாள். திருடியின் அம்மம்மா எதிராளியின் சார்பில் பிரசன்னம். தெரியாமல் பிள்ளை மாறிப் போட்டுக் கொண்டு போயிட்டாளாம். பொருள் மீள ஒப்படைப்பு. என் இதயத்தையும் சேர்த்து. ஒரு வருத்த்ம், சங்கடம் ஏதும் கிடையாது. பழகி விட்டது போல. மாமி உள்ளுக இருந்து ‘இதுகளுக்கு இதுவே வாடிக்கையாப் போச்சு’ என்று புறுபுறுத்தது உரக்கவே செவியில் விழுந்து என் மர மண்டையில் உறைத்தது.
மாமிக்கு ஏற்கனவே எங்கள் காவியங்கள் எல்லாம் மச்சாள் வழி அரங்கேறியிருக்கும் போல.பழிக்குப் பழி வாங்க வேண்டுமே? என்னே குடும்பம். இந்த மினுக்குத் தளுக்கு எல்லாம் வெளி வேடமா? காட்வெயார் தான் நல்ல இருக்கா? சொfட்வெயார் முழுக்க குழறு படியா? காத்திருந்தேன். மச்சான் திரும்பும் நாள். காதல்க் கன்னியும் கனியும் ரசத்துடன் சீண்டிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியவில்லை, எரியும் நெருப்பைக் கிளறிக் கொண்டிருக்கிறாள் என்று. மச்சான் கிளம்பி விட்டான். அவனுக்கு உரக்கச் சொல்லிய படி தள்ளி விட்டேன் செருப்பை.
அவளுக்குக் கேட்டும், புரிந்தும் இருக்க வேண்டும். நான் என்ன சொன்னேன் என்று. அது வேறொன்றும் இல்லை.
‘செருப்பு’.