நான் வேலை செய்யும் ஒரு இருட்டுக் கட்டடம். யாருக்குமே உள்ளுக்குள் என்ன நடக்குதென்று பூரணமாகத் தெரியாது. நாட்டின் முக்கியமான மற்றும் அத்தியாவசிய தேவைகள் பரிமாறப்படும் இடம். இன்னமும் பல ரகசியங்களை தனக்குள் மூடி வைத்திருக்கின்றது. கட்டடத்தின் அளவுக்கு கூலிகளின் அளவு மிகவும் கொஞ்சம்.
அதிலும் அதைக் கூட்டிக் கழுவித் துடைச்சு வைக்கிறதுக்கு என்று ஒரு கூட்டம். அங்கும் பல பிரிவுகள். கட்டடத்தின் வெளிப் பக்கத்தை பெருக்கவும், ஊதித் தள்ளும் சிகரட் அடிக்கட்டைகளை பொறுக்கவும் வாய்க்குள் மித மிஞ்சிப் போன எச்சிலை துப்பினால் அதைத் துடைக்கவும் என்று ஒருத்தன். பாவம். அவன் ஏற்கனவே ஒரு மாதிரி. கொஞ்சம் மூளையில் சுகமில்லாத ஒரு நடுத்தர வயது ஆடவன். இது வரைக்கும் எந்த வித குளறுபடியும் செய்ததாகத் தெரியாது.
எதுவோ ஒரு பன்னாடை முறையிட்டுள்ளது. அவன் பார்க்கின்ற பார்வை சரியில்லையாம். இருக்கலாம். கூட பணி புரிபவளின் சட்டைக்குள் என்ன இருக்கு என்று ஆராய்பவனுக்கும், அவனுக்கு ஏத்தி விட்டு குளிர்காயும் மகளிர் அணிக்கும் அவன் ஒரு குறைபாடுள்ள ஒரு சக மனிதன் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் வந்திருக்காது தான்.
பாவம் அவன். கடந்த ஒரு மாதமாக கட்டடத்துகு வெளியிலேயே தவம் கிடக்கின்றான். மீண்டும் வேலையில் சேரலாம் என்ற நம்பிக்கை.அவனுடன் கூட வேலை செய்யிறவங்களும் அவனிடம் ஒழிந்து திரிகிறார்கள். தினமும் இது ஒரு வாடிக்கை. அவனுக்கு கொடுக்கின்ற சம்பளத்தில் ஒருவனால் மூன்று வேளையும் ஒழுங்காச் சாப்பிடக் கூட முடியாது. அவனிடமும் தமது திமிரைக் காட்டி இ ருக்கு ஒரு கூட்டம். அவனால் இப்பொழுது எங்கு வேலை பார்க்க முடியலாம்?
நேற்று வழமை போல அவன் வந்து நின்றான். ஒரு பெண்மணி கொஞ்சம் காசு கொடுத்து விட அவன் அதை வாங்கிக் கொண்டு சாப்பிடச் சென்று விட்டான். ஆமாம், அவன் உடல் மெலிந்து தான் போனான். சாப்பாட்டுக்கு என்ன செய்வான். கடைசியில் கை ஏந்த வைத்து விட்டார்களே. இன்றும் அவனைப் பார்த்தேன். என்ன செய்வது ஏதாவது கொடுக்கவும் மனசு வரவில்லை. அந்த முகத்தையும் உற்றுப் பார்க்கவும் தைரியம் இல்லை. நானும் ஒரு குற்றவாளி தான்.