காலையில் அஞ்சு மணிக்கே அம்மா எழுப்பியிருவா. இந்தப் பனக்காய் சீசன் தொடங்கினதில் இருந்து இது ஒரு தலைவலி. அதுவும் சும்மா இல்லை. கையில் டோர்ச் லைற்றும் கடகமுமாக ஒவ்வொரு பனை பனையாத் தேடிப் போகணும். அதிலும் கொஞ்சம் பிந்தினாக் காணும். பக்கத்து வீட்டுக்காரன் முந்தியிருவான். நாலைஞ்சு நாளாய்க் கவனிச்சு அவங்கள் எப்படியும் அஞ்சு மணிக்கு பிறகு தான் எழும்புவாங்கள் எண்டதைக் கண்டுபிடிச்சு எங்கட நேரத்தை அஞ்சு மணியாக்கியாச்சு.
அம்மாவுக்கு ஒரு பெரிய கடகம். எனக்கு சின்னதா ஒண்டு. பனங்காய் பிறக்குறதுக்கெண்டே அம்மம்மா தனிய இழைச்சு பொத்தி வச்சிருப்பா. பத்தாததுக்கு அப்பு வேற நாரினால் பின்னியிருப்பார். நல்லாப் பாரம் தாங்கும். சரி கிளம்பியாச்சு. அவிண்டு விழுகிற சாறத்தை இழுத்து இடுப்பில கட்டிக் கொண்டு அம்மாவுக்கு பின்னால போக வேண்டியது தான். முதலில பிள்ளையார் கோவில் வளவு. போற வழியிலேயே அப்பிடியே சறத்தை தூக்கி ஒண்ணுக்கு அடிச்சு அந்த நேரத்தை மிச்சம் பிடிச்சுக்கலாம். அம்மாவுக்கு தெரியும் எந்தப் பனைக்கு கீழ போனால் நிறையப் பனங்காய் விழுந்து கிடக்கும் எண்டு, அங்க போனால் தெரிந்து விடும் யாராவது முன்னுக்கே வந்து பிறக்கீட்டாங்களா எண்டு. பிறகென்ன அடுத்தது பூனாந்தோட்டத்துக்கு போக வேண்டியது தான். ஒவ்வொரு நாளும் ஆளுக்கு ஒரு கடகம் பிறக்காமல் வீட்ட வாறேல்ல.
அதிலும் இந்த டோர்ச் லைற் அடிக்கிற செலவுக்கு இந்தப் பனங்கொட்டை பெறுமதியானதா எண்டு எனக்கு எப்பவுமே விளங்கினதில்லை. இருந்தாலும் ஏதோ ஒண்டு இருக்கு. நானறிஞ்சு இதுவரையில் எவனும் பனங்கொட்டை பிறக்கப் போய் பனங்காய் விழுந்து அடிபட்டதோ, பனை மரத்துக்கு கீழ கக்கூசு இருக்கும் போது பனங்காயோ, கங்கு மட்டையோ விழுந்து செத்ததோ கிடையாது. இந்தப் பனங்கொட்டை பிறக்குறதிலேயே எழுதப்படாத பல சட்டங்களும், புரிந்துணர்வுகளும் இருக்கு. பிறக்கிக் கொண்டு ஒரு இடத்தில குவிச்சு விட்டால் ஒரு குஞ்சு குரும்பானும் தொடாது. எப்பவாவது மாடு ஈக்கிறதுக்கு இழுத்துக் கொண்டு போனால்ச் சரி. கடைசியில பெரிய கும்பியாச் சேர்ந்த பிறகு பக்கத்திலேயே பாத்தி வெட்டி, அள்ளிக் கொட்டி மூட வேண்டியது தான். ம்ம்ம், அப்புறமா கிழங்குக்கும்,ஒடியலுக்கும் அடிபடும் போது தெரியும் அஞ்சு மணிக்கில்ல நாலு மணிக்கே எழும்பிப் போயிருக்கணும் எண்டு.
இருந்தாலும் பக்கத்து காணிக்கார வாலுகள் ரொம்பப் படான். வளவுக்கேயே காவோலையைப் போட்டு மூடி ஒரு கொட்டிலப் போட்டிட்டு படுத்திருப்பாங்கள். பனங்காய் விழுகிற சத்தம் கேட்டக் காணும் விழுந்தடிச்சு ஒடிப் போய் பிறக்கீருவாங்கள். பத்தாததுக்கு கடகத்தால நிலத்தில அடிச்சு சத்தம் போட்டு அடுத்தவங்கள ஓட வைச்சு சிரிப்பானுகள். எங்களுக்கு பரவாயில்லை. அப்பற்ற அரசாங்கச் சம்பளம் மாசா மாசம் வந்திரும். அவனுகள் பாவம். ஒடியல வித்துக் காசாக்கினால் தான் ஒரு சைக்கிளோ , புதுச் சாறமோ கிடைக்கும். அதாலேயே நான் அவங்களோட போட்டிக்குப் போறதில்லை. இதிலும் ஒரு கள்ள வேலை. பக்கத்து ஆளில்லா வளவுக்கு எங்கட வேலியில பொட்டொண்டு வைச்சு ஆறுதலாகப் போய் பிறக்கி அது ஒரு குவியலா வளவுக்க பெரிசாகும்.
எனக்கு காலைம்பற எழும்புறதோ, கடகத்தோட அலையுறதோ பெரிய வேலையில்லை. ஆனாலும் பூனாந்தோட்ட முடக்குக்கு போகச் சரியான பயம். அங்க நிக்கிற ஒத்தைப் பனையில கொள்ளிவாய்ப் பேய் இருக்காம். அது செக்கல்ல போனால் கல்லால எடுத்து எறியுமாம். இதுவரைக்கும் ஒருத்தரும் கல்லெறிபடாட்டியும் பயம் மனசுக்குள்ள இருக்குது. பார்க்கலாம்..
கொளும்புல எங்க பனங்கா புறகிரா
Comment by சங்கர் — February11, 2010 @ 04:10
அழகான் தாயகத்து இளம்பருவ நினைவுகள். பணம பழம் கிழங்கு ஒடியல் அது சாபிட்டு சுவைத்தவர்களுக்கு தான் அருமை புரியும் நான் தலியணைக்கு கீழ் வைத்து ஒடியல் சாபிட்ட் ஆட்க்ளாக்கும். வாயிலே தேன் ஊறுதே….
Comment by nilaamathy — February11, 2010 @ 11:08